சிங்கள மக்களை சமாளிக்க தெற்கில் பொய்ப் பரப்புரை அரசமைப்பு தொடர்பில் பலதையும்  பேசுகின்றனர் என்கிறார் சம்பந்தன் 

“தெற்கில், சிங்கள மக்கள் மத்தியில் புதிய அரசமைப்புத் தொடர்பில் போலிப் பரப்புரை பரப்பப்பட்டு வருகின்றது. சிங்கள மக்களைச் சமாளிப்பதற்கு ஆட்சியில் உள்ளவர்கள் ஒவ்வொரு கருத்துக்களைச் சொல்லலாம். மூவின மக்களின் இணக்கத்துடன்தான் புதிய அரசமைப்பு நிறைவேற்றப்பட இருக்கின்றது.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.
‘கூட்டாட்சி (சமஷ்டி) தொடர்பில் அன்று பிரச்சினை இருந்தது. இன்று தேர்தல் முறைமை தொடர்பில்தான் பிரச்சினை உள்ளது. தேர்தல் முறைமை இறுதி செய்யப்பட வேண்டும். அதுவரையில் புதிய அரசமைப்புக்கான சட்டவரைவையோ அல்லது சட்டத்தையோ நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரமுடியாது. ஏனென்றால் ஒரு கட்சியை மையப்படுத்திய அரசு அமையாத வரையில் இந்த விடயத்தைச் செய்யமுடியாது. சிறுகட்சிகளுடன் தொடர்ந்து அரசைக் கொண்டு நடத்த முடியாது. ஆகவே, உறுதியா அரசை அமைக்கும் தேர்தல் முறைமையை உருவாக்க வேண்டும். அதன் பின்னரே புதிய அரசமைப்புப் பற்றிச் சிந்திக்க முடியும் என்பதே யதார்த்தமானதாகும்’ என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார்.
இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கேட்டபோது,
“புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்காக வழிநடத்தல் குழு அமைக்கப்பட்டது. வெளியில் ஒவ்வொரு அரசியல்வாதிகளும் புதிய அரசமைப்புத் தொடர்பில் ஒவ்வொரு விதமான கருத்துக்களை முன்வைக்கலாம். நாங்கள் தமிழ் மக்கள் மத்தியில் உண்மையை மட்டும் சொல்லுகின்றோம்.
தெற்கில் சிங்கள மக்கள் மத்தியில் புதிய அரசமைப்புத் தொடர்பில் பொய்ப் பரப்புரைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவர்களைச் சமாளிப்பதற்காக ஆட்சியில் உள்ளவர்கள் ஒவ்வொரு கருத்துக்களைச் சொல்லலாம்.
எனினும், மூவின மக்களின் இணக்கத்துடன்தான் புதிய அரசமைப்பு நிறைவேற்றப்பட இருக்கின்றது.
ஒவ்வொருவரும் தத்தமது நிலைப்பாடுகளைத் தெரிவிக்கும்போது மக்கள் மத்தியில் குழப்பம் வரும். அது தவிர்க்க முடியாதது.
அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழு கூடவுள்ளது. எப்போது கூடும் என்று அறிவிக்கப்படவில்லை. அந்தக் கூட்டத்தில்தான் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானம் எடுப்போம். அதுதான் உத்தியோகபூர்வ தீர்மானமாக இருக்கும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்