தமிழ் ஊடகவியலாளர் படுகொலைக்கு  நீதி கோரி ஜெனிவா செல்கின்றார் சரா  சுவிஸ், கனடா தூதுவர்களுடனான சந்திப்பில் தெரிவிப்பு 

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை, வடக்கின் நிலைமைகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், சுவிற்சர்லாந்து தூதுவர் ஹான்ஸ்பீட்டர் மொக், கனடாத் தூதுவர் டேவிட் மக்கினன் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பு நேற்றுக் கொழும்பில் நடைபெற்றுள்ளது.
மக்களின் வாழ்வாதாரத்தை உயர்ந்துவது, இளையோருக்குச் சுயதொழில் பயிற்சிகளை வழங்குதல், மொழிக் கற்கைகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வது போன்ற விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டுக் கொண்டார்.
தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைப்பதற்கு சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்த நாடாளுமன்ற உறுப்பினர், அதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என்று தூதுவர்களிடம் கேட்டுக் கொண்டார்.
தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை. இந்த ஆண்டு ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவை அமர்வில் இது தொடர்பாக முறையிடவுள்ளேன் என்றும் தூதுவர்களிடம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்