மாதிரி கிராம வீட்டுத்திட்ட வேலைகளை நேரில் பார்வையிட்டார் சிறிதரன் எம்.பி.

கிளிநொச்சி, பளை – தம்பகாமம் கிராமத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் அமைக்கப்படுகின்ற வீடுகளை, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் நேற்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

குறித்த, கிராமத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு நிரந்தர வீடுகளின்றி வாழும் மக்களுக்கான நிரந்தர வீட்டுத்திட்டங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் கோரிக்கைக்கமைய, அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் வீடமைப்புத் திட்டத்தினூடாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மூலம் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், குறித்த மாதிரிக் கிராம வீட்டுத்திட்டப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்ட சிறீதரன் வீட்டுத்திட்ட பயனாளிகளுடன் கலந்துரையாடி கிராமத்தில் உள்ள ஏனைய வளப் பற்றாக்குறைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

மக்களது அவலங்களை நாடாளுமன்றத்திலும் ஏனைய உரிய இடங்களிலும் சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிரந்தர வீட்டுத்திட்டங்களை வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பல தடவைகள் வலியுறுத்தி வந்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்கின்ற பல கிராமங்களில் மக்களுக்கான நிரந்தர வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படாத நிலையில் நீண்ட காலமாகப் பலர் தற்காலிக கொட்டகைளில் அவலப்பட்டு வருகின்றார்கள்.

இந்நிலையில் மகிந்தராஜபக்ச அரசின் அராஜக ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சுட்டிக்காட்டிய விடயங்களைக் கருத்திற்கொண்ட தற்போதைய அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்புத் திட்டங்களை அமைக்கும் பணிகளை ஆரம்பித்து செயற்படுத்தி வருகின்றது.

அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் ஒரு அங்கமாக பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள தம்பகாமம் பகுதியில் கிராமம் ஒன்றில் 20 வீடுகளும் கிராமம் இரண்டில் 12 வீடுகளும் கொண்ட மாதிரிக் கிராம வீடமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த பகுதிக்கு நேற்றைய தினம் நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முகாமையாளர் சுபாஸ்கரன், உதவிப் பொறியியலாளர் சிவநேசன், தொழிநுட்ப உத்தியோகத்தர் மதிதீபன் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் வீடமைப்புப் பணிகளைப் பார்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது தம்பகாமம் பகுதியின் வீதி புனரமைப்பு மக்கள் எதிர்நோக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் மக்கள் தமது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்