இன்று யாழ். செல்லும் பிரதமர் பல நிகழ்வுகளில் பங்கேற்பார்!

யாழ்ப்பாணத்துக்கு இன்று வியாழக்கிழமை செல்லும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பலாலி விமான நிலைய அபிவிருத்தி, காங்கேசன்துறை துறைமுக சீரமைப்பு உள்ளிட்டவை தொடர்பான ஆய்வுகள் மற்றும் சில நிகழ்வுகளிலும் பங்கேற்கின்றார்.
இன்று காலை யாழ்ப்பாணத்தை வந்தடையும் அவர் முற்பகல் 10 மணிக்கு நல்லூர் ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவார்.
வழிபாடுகளை முடித்துக்கொண்டு யாழ்.மாவட்ட செயலகத்துக்குச் செல்லும் பிரதமர் மாவட்ட செயலக அலுவலர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
அந்தக் கலந்துரையாடலை முடித்துக் கொண்டு நண்பகல் 12.15 மணியளவில் யாழ். போதனா வைத்தியசாலைக்குச் செல்லும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக் கட்டடத் தொகுதியை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கவுள்ளார்.
இதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள ஜெட்விங் ஹோட்டலில் மதின போசன உணவை முடித்துக் கொண்டு பிற்பகல் 1.45 மணியளவில் இருந்து பிற்பகல் 2 மணிவரைக்கும் நாவற்குழி மற்றும் கைதடியில் புதிதாக அமைக்கப்பட்ட பாலங்கள் தொடர்பான ஆராய்வையும் மேற்கொள்ளவுள்ளார்.
அங்கிருந்து பிற்பகல் 2.15 மணிக்கு கோப்பாய்க்குச் செல்லும் பிரதமர் வலிகாமம் கிழக்குப் பிரதேச செயலக நிர்வாகக் கட்டடத்தைத் திறந்து வைக்கவுள்ளார்.
இதன் பின்னர் பிற்பகல் 3.15 மணியளவில் பருத்தித்துறைக்குச் செல்லும் அவர் பிரதேச செயலக நிர்வாகக் கட்டடத்தையும் திறந்து வைப்பார்.
தொடர்ந்து மாலை 4.15 மணியளவில் பலாலி உயர்பாதுகாப்பு வலயத்துக்குச் செல்லும் பிரதமர், பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாகத் தரமுயர்த்துவது தொடர்பான ஆராய்வுகளை மேற்கொள்ளவுள்ளார்.
பின்னர் இராணுவ உயர்பாது காப்பு வலயமாக இருந்து அண்மையில் பகுதியளவில் விடுவிக்கப்பட்டுள்ள மயிலிட்டிப் பகுதியில் மக்களுக்கான வீட்டுத்திட்டம், பாடசாலை, பஸ் நிலையம் உள்ளிட்டவைக்கான அடிக்கல்லை நடவுள்ளார்.
அதன் பின்னர் காங்கேசன்துறை துறைமுகத்துக்குச் செல்லும் அவர் துறைமுக அபிவிருத்தி தொடர்பிலும் ஆராய்வுகளை மேற்கொள்ளவுள்ளார் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்