உண்மை நல்லிணக்க ஆணைக்குழு மூலம் சட்ட நடவடிக்கை இருக்காது – சிறிலங்கா அரசாங்கம்

உண்மை நல்லிணக்க ஆணைக்குழு மூலம், எவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்று அபிவிருத்தி மூலோபாய, அனைத்துலக வணிக பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,  கடந்த கால மோதல்களின் போது நடந்த சம்பவங்கள் தொடர்பான உண்மைகளைக் கண்டறியவே உண்மை நல்லிணக்க ஆணைக்குழு உருவாக்கப்படவுள்ளது.

இதன் மூலம், எவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது.

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவினால் 2010இல் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்குக் கூட, சிலர் மீது சட்டநடவடிக்கை எடுக்க அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், நல்லாட்சி அரசாங்கம் தனிநபர்களைக் குற்றம்சாட்டும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் எதிர்கால நல்லிணக்கத்துக்கு உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்.

தென்னாபிரிக்காவில் நிறவெறி மோதல்களுக்குப் பின்னர், அமைதி, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் உண்மை நல்லிணக்க ஆணைக்குழு  முக்கிய பங்காற்றியது.

அது போன்று தற்போது முன்மொழியப்பட்டுள்ள உண்மை நல்லிணக்க ஆணைக்குழு அமைதியான  சிறிலங்காவைக் கட்டியெழுப்ப பலமான அடித்தளத்தை இட்டுக் கொடுக்கும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்