பலமான பிரேரணை ஜெனீவாவில் வந்தால் ஆதரவு: மாவை சேனாதிராசா

ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக இம்முறை புதிய பிரேரணை கொண்டுவரப்படவுள்ள நிலையில் அப் புதிய பிரேரணையானது ஏற்கனவே சிறிலங்கா அரசாங்கமும் ஏற்றுக்கொண்டு நடமுறைப்படுத்து வதாக கூறிய விடயங்களை குறிப்பிட்ட கால அட்டவனைக்குள் நிறைவேற்ற வேண்டும் என அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க கூடியதாகவும், முன்னைய பிரேரணைகளை விட பலம் மிக்கதாகவும் காணப்பட்டால் அதற்கு தாம் ஆதரவளிப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

மேலும் பாதுகாப்பு சபைக்கு இலங்கை அரசாங்கத்தை கொண்டு செல்லும் சந்தர்பத்தில் பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரம் உள்ள நாடுகள் தமது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இல்ங்கை அரசாங்கத்தை அதிலிருந்து பாதுகாத்து விட்டால் அது முற்றுமுழுதாக அரசாங்கத்திற்கு சாதகமானதாக அமைந்துவிடும். எனவே அது தொடர்பாக தாம் மிகவும் அவதானமாகவே செயற்படுவோம் எனவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஜக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையில் இம் முறை இலங்கை தொடர்பாக புதிய பிரேரனை பிரிட்டன் தலைமையில் கொண்டுவரப்படவுள்ளது. இந் நிலையில் கால அவகாசம் வழங்குவது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவை தொடர்பு கொண்டு கேட்ட போதே அவா் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக  அவா் மேலும் தெரிவித்திருப்பதாவது,

தமிழ் மக்களை பொறுத்த வரையில் எங்களுக்கு இருக்கின்ற சர்வதேச ரீதியான பலம் என்பது ஜ.நா. மனிதவுரிமை பேரவையின் தீர்மானங்களேயாகும். அந்த வகையில் இலங்கை தொடர்பில் புதிய பிரேரணை கொண்டு வரப்பட வேண்டியது அவசியமானது. அப் பிரேரணையை பிரிட்டன் தலைமை தாங்கி கொண்டு வருகின்றது. இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் இருந்து இலங்கையை விலகிச் செல்ல முடியாது.

ஆனால் அரசாங்கம் தாம் கொடுத்த வாக்குறுதிகளை மீறி அதற்கு எதிரான கருத்துக்களையே கூறி வருகின்றது. தாம் கட்டுபாடற்ற முறையில் செயற்பட வேண்டும் எனவும் அதில் கூறப்பட்ட விடயங்களை செய்ய முடியாது போன்ற கருத்துக்களையே கூறி வருகின்றார்கள். 30.1, 34.1 என்ற தீர்மானங்களில் குறிப்பாக 34.1 தீர்மானத்தை இலங்கை உட்பட சர்வதேசத்தின் 47 நாடுகளும் இணைந்து நிறைவேற்றியிருந்தது. ஆனால் தற்போது இலங்கை அரசாங்கம் அதற்கு எதிரான போக்கை கடைப்பிடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மனிதவுரிமை விடயங்களை தாம் கடைப்பிடிப்பதாகவும் அதனை மதித்து நடப்பதாகவும் கூறினாலும் இத்தனை கால அவா்களது நடவடிக்கைகளை பார்க்கும் போது ஜனாதிபதியும் அரசாங்க தரப்பினரும் ஏற்றுக்கொண்ட தீர்மானங்களை முழுமையாக நடமுறைப்படுத்த தவறிவிட்டார்கள். அத்தகைய தவறுகள் காணப்பட்ட போதும் அவா்கள் ஏற்றுக்கொண்ட விடயங்களை செய்வதற்கு இரண்டு வருட கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அதிலும் சில முன்னேற்றங்களை தவிர முழுமையாக நிறைவேற்ற தவறிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டை சுமத்த வேண்டியுள்ளது.

இப்போது புதிய பிரேரணை கொண்டு வரப்படும் போது அப் புதிய பிரேரணையானது முன்னர் கொண்டு வரப்பட்ட பிரேரணையை விட பலம் வாய்ந்ததாகவும் அழுத்தம் நிறைந்ததாகவும் அரசாங்கத்திற்கு கடுமையான அழுத்தம் கொடுத்து முன்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முழுமையாக நிறைவேற்றுவதற்குரிய அழுத்தத்தை கொடுக்குமாக இருந்தால் நாம் அதனை ஆதரிக்கலாம். அதற்கு பதிலாக அரசாங்கம் அதில் இருந்து தப்பி பிழைப்பதற்கு நாம் இடமளிக்க முடியாது.

இலங்கை அரசாங்கம் தப்பி பிழைப்பதற்கு பதிலாக சர்வதேச ரீதியாக இலங்கையில் தலையிடுவதற்கான தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என கூறப்படுகின்றது. அதேபோன்று பாதுகாப்பு சபைக்கு கொண்டு போக கூடிய தீர்மானமாக இருக்க வேண்டும் எனவும் சிலர் வாதிடுகிறார்கள்.

பாதுகாப்பு சபைக்கு கொண்டு வருவதற்கான தீர்மானம் நல்லதாக இருந்தாலும் அது ஆபத்தானதாக இருக்கும் என நாம் கருதுகின்றோம். எனெனில் பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்வதற்கு பலமான ஒரு நாட்டினாலேயே முடியுமாக இருக்கும். ஆனால் பாதுகாப்பு சபையில் ஒரு நாட்டிற்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றுவதாக இருந்தால் அதில் விட்டோ அதிகாரம் உள்ள நாடுகளான ரஷ்யா சீனா போன்ற நாடுகள் அதனை தோற்கடிக்க முடியும். அதற்கான சாத்தியம் இருக்கின்றது.

அவ்வாறு வீட்டோ அதிகாரம் பாவிக்கப்பட்டால் அது முற்றுமுழுதாக இலங்கைக்கு சாதகமாக போய்விடும். ஆகவே அதனை நாம் செய்ய முடியாது. எனவே அதில் மிக அவதானமாகவே செயற்படுவோம்.

கால அட்டவணைக்குள் ஏற்கனவே இலங்கை அரசாங்கம் முழுமையாக ஏற்றுக்கொண்ட பொறுப்புக்கூறல், உண்மையை கண்டறிதல், நிலங்கள் மீள ஒப்படைத்தல், இனப் பிரச்சனைக்கான தீர்வு போன்ற விடயங்களை உள்ளடக்கிய 34.1 என்ற தீர்மானத்தை தாம் குறிப்பிடும் காலத்துக்குள் செய்ய வேண்டும் என கூறுவதாகவும் அதற்கு ஏற்ற வகையில் தலையீடுகளை செய்யும் வகையிலும் இப் புதிய பிரேரணை காணப்பட்ட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

மேலும் நெருக்கடிகளில் தப்பித்துக்கொள்ள ஜனாதிபதி எடுக்கின்ற முயற்சிகளையும் பேசுகின்ற விடயங்களையும் கருத்துக்களையும் வைத்து இலங்கை அரசாங்கம் இந்த தீர்மானத்தில் இருந்து விலகிவிடும் சந்தர்ப்பத்தை நாம் கொடுக்க கூடாது. குறிப்பாக 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 34.1 என்ற தீர்மானத்தை நிறைவேற்றுவதாக இலங்கை ஏற்றுக்கொண்டு நிறைவேற்றியிருக்கிறார்கள். எனவே அதில் இருந்து விடுவதற்கு நாம் அனுமதிக்க கூடாது. அதற்காக நாம் சர்வதேச மட்டத்திலும் இராஜதந்திர மட்டத்திலும் எங்களுடைய பங்களிப்பை செய்வோம் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்