40வது மாநாட்டில் கலந்துக் கொள்ளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் குழு ஒன்று இந்த முறை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 40வது மாநாட்டில் கலந்துக் கொள்ளும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த மாதம் 25ம் திகதி ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவை மாநாடு ஆரம்பமாகவுள்ளது.

இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் குழு ஒன்று அங்கு செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே தமக்கு அரசாங்க விடுமுறை கிடைக்கும் பட்சத்தில் தாம் ஜெனீவா செல்ல எதிர்பார்த்திருப்பதாக, வடமாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்திருந்தார்.

இதேவேளை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் பேரவையின் சார்பில், விசேட அறிக்கை ஒன்று மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

அதேநேரம், காணாமல் போனோரின் உறவினர்கள் சார்பாகவும் விசேட குழு ஒன்று ஜெனீவா நோக்கி பயணிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று ஜெனீவா நோக்கி பயணிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 2015ம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் அமுலாக்கத்துக்கான கால அவகாசம் நிறைவடைகிறது.

அத்துடன் இந்த முறை இலங்கையின் பொறுப்புக்கூறல், மறுசீரமைப்பு மற்றும் மனித உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையிலான புதிய பிரேரணை ஒன்று முன்வைக்கப்படும் என்று பிரித்தானிய அறிவித்துள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் 40வது மனித உரிமைகள் பேரவையின் மாநாடு இலங்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்