தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்

 

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற பொது நிர்வாக அலுவலர் திலக் கொல்லுரே நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற பொது நிர்வாக அலுவலரான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன, அஷோக்க விஜயதிலக உள்ளிட்ட மூவர் பெயரிடப்பட்டுள்ளதாக அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், பேராசிரியர் சிறி ஹெட்டிகே, சாவித்திரி விஜேசேகர உள்ளிட்ட ஆணைக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலத்தை மேலும் மூன்று வருடங்களுக்கு நீடிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நாடாளுமன்ற அரசியலமைப்பு பேரவை தெரிவித்துள்ளது.

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கமைய, தேசிய பொலிஸ் ஆணைக்குழு கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நியமிக்கப்பட்டது. மூன்று வருட பதவிக்காலத்தைக் கொண்ட ஆணைக்குழுவின் பதவிக்காலம் 2018 நவம்பர் மாதம் 14 ஆம் திகதியுடன் முடிவடைந்தது.

எனினும் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்திற்கிணங்க, உறுப்பினர்கள் நியமிக்கப்படும் வரையும் ஆணைக்குழு முடக்கப்படவில்லை.

இதனிடையே, ஆணைக்குழுவின் தலைவராக செயற்பட்ட சீ.எச்.மனதுங்கவுடன் முன்னாள் பொலிஸ் மா அதிபரான ப்ரேன்க் டி சில்வா, அன்டன் ஜெகநாதன் உள்ளிட்ட உறுப்பினர்களும் அரசியலமைப்பு பேரவையினால் நீக்கப்பட்டுள்ளனர்.

புதிய தலைவராக பரிந்துரைக்கப்பட்டுள்ள திலக் கொல்லுரே தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினராக இதற்கு முன்னர் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்