புல்வாமா தாக்குதல் கொடூரமானது: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

ஜம்மு காஷ்மீர், புல்வாமா பகுதியில் கடந்த 14 ஆம் தேதி இந்திய வீரர்கள் மீது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் – இ- முகமது என்ற அமைப்பு வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் சுமார் 45 வீரர்கள் பலியானார்கள். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட ஜெய்ஷ் – இ- முகமது என்ற அமைப்பை சார்ந்த 3 பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும், ஜெய்ஷ் – இ- முகமது என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் பாகிஸ்தானிலேயே ஒளிந்திருப்பதாகவும், புல்வாமா தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானின் பங்கு உள்ளது எனவும் வெளிப்படையாக குற்றம் சாட்டிவருகிறது இந்தியா.

இந்த நிலையில், புல்வாமா தாக்குதல் கொடூரமானது எனவும், இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் சூழல் குறித்தும் தாம் தொடர்ந்து அறிந்துவருவதாகவும், சரியான நேரத்தில் தங்களது கருத்தை வெளிப்படுத்துமெனவும் தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். மேலும், பாகிஸ்தானும், இந்தியாவும் இணைந்து செயல்பட்டால் அது சிறப்பானதாக இருக்குமெனவும் தெரிவித்துள்ளார் ட்ரம்ப்.

முன்னதாக, புல்வாமா தாக்குதல் தொடர்பில் தற்காப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியா மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளுக்கும் தாங்கள் ஆதரவளிப்போம் எனவும், தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டுமெனவும் அமெரிக்கா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்