தீவிரவாதிகளை ஒடுக்குங்கள்: பாகிஸ்தானை நெருக்கும் அமெரிக்கா!

பயங்கரவாத மற்றும் தீவிரவாத அமைப்புகள் மீது நிச்சயம் பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தாக வேண்டுமென எச்சரிக்கை விடுத்துள்ளது அமெரிக்கா.

கடந்த 14 ஆம் தேதி காஷ்மீர் புல்வாமா பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் – இ – முகமது என்ற அமைப்பை சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் சுமார் 45 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த தேசத்தை மட்டுமின்றி, உலகத்தை அதிர்வுற செய்த இந்த தாக்குதல் இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலாகவே கருதப்பட்டது.

தீவிரவாதத்திற்கு எதிரான எங்கள் வீரர்கள் தியாகத்தை எப்போதும் வீண்போக விடமாட்டோம் ; எங்கள் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் எதிரிகள் பதில் சொல்லியே ஆக வேண்டுமென புல்வாமா தாக்குதலில் ஈடுபட்டவர்களை பிரதமர் மோடி எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று அதிகாலை இந்தியா – பாகிஸ்தான் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதி மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளில் இந்திய விமானப்படையின் 12 மிராஷ் ஜெட் விமானங்கள், தீவிரவாத முகாம்கள் மீது ஆயிரம் கிலோ எடையுள்ள குண்டுகளை வீசி அழித்துள்ளது.

பாலாகோட், சாக்கோதி, முஸாஃபராபாத் ஆகிய இடங்களில் இருந்த தீவிரவாத முகாம்களை விமானப்படை குறிவைத்து தாக்குதல் நடத்தியதில் ஜெய்ஷ் – இ – முகமது உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை இந்திய வெளியுறவு செயலர் விஜய் கோகலேவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில், பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பாகிஸ்தான் அரசை எச்சரித்துள்ளது அமெரிக்கா.

முன்னதாக, பாகிஸ்தான் அரசுக்கு வழங்கி வந்த 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்