மாணவர்களை எதிர்காலத்திற்காக தயார்படுத்துவதில் ஒன்ராறியோ பாடசாலைகள் பின்னடைவு!

மாணவர்களை எதிர்காலத்திற்கு ஏற்றவாறு தயார்படுத்துவதில் ஒன்ராறியோ மாகாண பாடசாலைகள் பின்னடைவை சந்தித்திருப்பதாக தெரியவந்துள்ளது.

ஒன்ராறியோவின் 1,254 கத்தோலிக்க மற்றும் அரச பாடசாலைகளில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்விக்கான ‘வழித்தடங்களும் வழித் தடைகளும்: வாழ்க்கை திடடமிடல் மற்றும் தொழில் – ஒன்ராறியோ பாடசாலைகளுக்கான வழிகாட்டல்’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில், கடந்த ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக ஒன்ராறியோ பாடசாலைகளுக்கான வழிகாட்டி ஆலோசகர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், ஒன்ராறியோவில் 23 சதவீத ஆரம்பப் பாடசாலைகளில் மட்டுமே வழிகாட்டி ஆலோசகர்கள் உள்ளதாகவும், அவர்களில் அனேகர் பகுதிநேரமாக கடமையாற்றுவோர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மாநிலத்தின் 98 சதவீத உயர்நிலை பாடசாலைகளில் வழிகாட்டி ஆலோசகர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள போதிலும், அவர்கள் ஒவ்வொருவரும் தலா சுமார் 375 மாணவர்களின் செயற்பாடகளுக்கு பொறுப்பானவர்களாக காணப்படுகின்றனர்.

மேலும், இடைநிலைப் பாடசாலைகளில் இருந்து உயர்நிலைப் பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு அனேகமாக ஆலோசனை உதவிகள் எவையும் கிடைப்பதில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்