மிசிசாகாவில் கத்தி குத்து – பெண் கைது

மிசிசாகாவில் கத்தி குத்துக்கு இலக்காகிய ஆண் ஒருவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பெண் ஒருவரைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Hurontario வீதி மற்றும் லேக்சோர் வீதிப் பகுதியில், ஆன் வீதியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றினுள்ளே, இந்தக் கத்திக் குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த அந்தக் கட்டிடத்தின் 14ஆவது மாடியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக அயலில் வசிப்பவர்கள் ஊடகங்களிடம் தகவல் வெளியிட்டுள்ள போதிலும், அதனைக் பொலிஸார் உறுதிப்படுத்தவில்லை.

கத்திக் குத்துக்கு இலக்கான ஆண், உயிராபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், பின்னர் அவர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் அங்கிருந்த பெண் ஒருவரைக் கைது செய்த பொலிஸார் , அவரைத் தடுப்புக் காவலில் வைத்துள்ள போதிலும், கத்திக் குத்துக்கு இலக்கானவருக்கும் இந்தப் பெண்ணுக்கும் இடையே எவ்வாறான உறவு என்ற விபரங்கள் எவையும் விசாரணை அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை.

எனினும் இருவரும் குறித்த அந்த வீட்டில் ஒன்றாக வசித்து வந்ததாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர். பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்