அளவெட்டி மயானத்துக்கு மாவை 20 லட்சம் ஒதுக்கீடு!

வலி.வடக்கு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட அளவெட்டி கேணிப்பிட்டி இந்துமயானத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சோ.சேனாதிராசா எரிகொட்டகை மற்றும் இளைப்பாறு மண்டபம் என்பன அமைப்பதற்காக 20 லட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளார்.

2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல் காலத்தில் இந்த மயானம் வெறும் பற்றைக் காடாகக் காட்சியளித்தது. தேர்தலில் அளவெட்டி கும்பளாவளை வட்டாரத்தில் நின்று இலங்கைத் தமிழரசுக் கட்சியில் வெற்றிபெற்ற செ.விஜயராஜ், வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோ.சுகிர்தனை மயானத்துக்கு அழைத்துச்சென்று அந்த மயானம் திருத்தப்பட்டு மக்கள் பாவனைக்கு வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது கோரிக்கையை தவிசாளர் ஏற்றுக்கொண்டு உடனடியாக அதற்குரிய வேலைத்திட்டத்தை மேற்கொள்வார் எனத் தெரிவித்தார்.

அந்த வகையில், தவிசாளரினதும் உறுப்பினரதும் முயற்சியால் அரச அதிபரிடமிருந்து மயானத்துக்குச் செல்லும் வீதிகளைப் புனரமைக்க விசேட நிதியொதுக்கீடு செய்யப்பட்டு வீதிகள் புனரமைக்கப்பட்டன. பிரதேசசபை உறுப்பினர் விஜயராஜின் முயற்சியால் பிரதேசசபையோடு இணைந்து மயானம் துப்புரவாக்கப்பட்டது. அதன் பின்னர் பிரதேசசபையில் விஜயராஜ் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாகவும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபனின் குறித்தொதுக்கப்பட்ட நிதி 50 ஆயிரத்தையும் கொண்டு 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாவுக்கு குடிதண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட்டு, கைப் பம்மியும் பொருத்தப்பட்டது.

இதன் பின்னர் தற்போது பிரதேசசபை உறுப்பினர் விஜயராஜ் மயானத்தின் எரிகொட்டகை, இளைப்பாறு மண்டபம் என்பனவற்றின் தேவைகள் தொடர்பில் தவிசாளர் சுகிர்தன் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசாவுக்குத் தெரியப்படுத்தியதற்கமைவாக 20 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்