உண்மை எப்போதும் வெல்லும்: திருவள்ளுவரின் கூற்றை மேற்கோள் காட்டிய ராகுல்!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்திட வேண்டுமென தொடர்ச்சியாக பல்வேறு குரல்கள் தேசிய அளவில் எழுந்துவரக்கூடிய சூழலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், திமுக உள்ளிட்ட பிராந்திய கட்சிகள் பலவும் இணைந்துள்ளன.

தமிழகத்தைப் பொறுத்தமட்டில் திமுக தலைமையிலான அணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ள சூழலில், இக்கூட்டணி கட்சிகளின் முதல் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் இன்று நாகர்கோவிலில் நடைபெற்றுவருகிறது. அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு தமது கருத்துக்களை வெளியிட்ட ராகுல், “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் ஒரே வரி, எளிமையான வரி அமல்படுத்தப்படும். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 3 மாதங்களில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம். தமிழகத்தை ஆட்சி செய்பவர்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளனர். பிரதமர் மோடி 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாக கூறினார், ஆனால் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாடு வேலையில்லா திண்டாட்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது” என பேசினார்.

மேலும், “இந்தியாவை ஒற்றை கலாச்சாரம் கொண்ட நாடாக மாற்றிட முயலுவதை எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது” எனவும் தெரிவித்தார்.

முன்னதாக, உண்மை எப்போதும் வெல்லுமென்ற திருவள்ளுவரின் கூற்றை ராகுல் மேற்கோள் காட்டியது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்