சனிக்கிழமை ‘எழுச்சிப் பேரணி’க்கு தமிழரசு இளைஞர் அணியும் ஆதரவு

எதிர்வரும் சனியன்று யாழ்.குடாநாட்டில் நடத்தப்படவுள்ள மக்கள் எழுச்சிப் பேரணிக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் முன்னணியும் ஆதரவு தெரிவித்துள்ளது.
ஒன்றுபட்டு ஒரே சக்தியாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிடம் நீதி கோரிக் குரல் கொடுப்போம் என அது அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் முன்னணி விடுத்துள்ள அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-
“எதிர்வரும் 16ஆம் திகதி சனிக்கிழமை பல்கலைக்கழக சமூகத்தினால் நடத்தப்படும் மாபெரும் எழுச்சிப் பேரணிக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் முன்னணியினராகிய நாம் எமது ஆதரவையும், பங்களிப்பையும் முழுமையாக நல்குகின்றோம்.
இந்த எழுச்சிப் பேரணிக்கு தமிழ் மக்கள் எல்லோரும் ஒன்றுபட்டு ஒரே சக்தியாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் நீதி கோரிக் குரல் கொடுப்போம்.
அரசியல் வேறுபாடு இன்றி அனைத்துத் தரப்புக்களும் பங்குகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
போர் முடிந்து பத்து ஆண்டுகள் சென்றும் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்ந்தும் தீர்க்கப்படாமலே உள்ளன.
காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுவிப்பு, காணாமல்போனவர்களுக்கான தீர்வு மற்றும் பொறுப்புக்கூறலில் இருந்து எல்லாவற்றையும் அரசு தட்டிக் கழித்து வருகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைக் கூட அரசு நடைமுறைப்படுத்தாமல் காலத்தை இழுத்தடித்து வருகின்றது.
எனவே, தமிழ் மக்களாகிய நாம் அனைவரும் வேறுபாடின்றி ஓரணியில் நின்று எமது உரிமைக்காக குரல் கொடுப்போம்” – என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்