பிள்ளைகளுக்காக ஏங்கி உயிரிழந்த தாய்மாருக்கு துரோகியாகிவிடாதீர்கள்!- யாழில் உறவுகள்

தமது பிள்ளைகளுக்காக காத்திருந்து உயிரிழந்த ஆத்மாங்களுக்கு துரோகம் இழைக்காமல், அவர்களுக்காக பேசுங்கள். இல்லையேல் துரோகியாகிவிடுவீர்கள் என, காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஜெனீவாவிற்கு செல்லவுள்ள வடக்கு ஆளுநர் சுரேன் ராகவனை சந்தித்த பின்னர், யாழ். ஊடக அமையத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டனர்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த உறவுகள், ”எமது பிரச்சினைகளுக்கு தீர்வு தருவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது மறப்போம் மன்னிப்போம் என்ற கோட்பாட்டை கடைபிடித்து, பழையவற்றை கிளறாதீர்கள் என கூறி வருகின்றனர்.

அரசாங்கத்தினால் ஒன்றும் நடக்காத நிலையிலேயே நாங்கள் சர்வதேசத்தின் ஒத்துழைப்பை கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.

இந்நிலையில், ஜெனீவா செல்பவர்களுக்கு நாங்கள் கூறுவது எங்களிடமிருந்து எதற்காக வாக்கு பெற்றீர்களோ? அந்த நிலைப்பாட்டிலிருந்து விலகாதீர்கள். அந்த மக்களுக்காக ஒரு தடவையாவது செயற்படுங்கள்.

ஐ.நா. பிரேரணையை நிறைவேற்ற இரண்டு முறை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதன்போது ஒன்றும் செய்யாதவர்கள் மீண்டும் கால அவகாசத்தை பெற்று எதனை சாதிக்கப் போகிறார்கள்” எனக் கேள்வி எழுப்பினர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்