இனவாதத்தை தூண்டி அரசியல் தீர்வுக்கு முட்டுக்கட்டை: மஹிந்த அணிக்கு செல்வம் எம்.பி. எச்சரிக்கை!

தமிழ் மக்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வினை எதிர்பார்த்து காத்திருக்கின்ற நிலையில், வாக்குகளுக்காக இனவாதத்தை தூண்டி மக்களை ஏமாற்ற வேண்டாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெறும் வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை பெற்றுத்தர அரசாங்கம் அக்கறை காட்டினாலும், அதனை நடைமுறைப்படுத்தும் விடயங்களில் அரசாங்கம் இறங்கவேண்டுமென செல்வம் அடைக்கலநாதன் இதன்போது கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக அரசியல் தீர்வினை எதிர்க்கும் செயற்பாடுகளை எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட தரப்பினர் முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்ட செல்வம் எம்.பி., குறித்த எதிரப்புகளை தாண்டி இனப்பிரச்சினையை தீர்க்க வழி ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அவ்வாறு இல்லாவிட்டால் பிரச்சினையை தொடர்ந்து சந்திக்கும் நாடாக இலங்கை மாறுமென அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் போராட்டங்களை மேற்கொள்ளும் நிலையை எதிர்கொண்டுள்ளனர் என தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன், இனப்பிரச்சினையை தீர்க்க பாரிய போராட்டங்களை நடத்த தயங்கமாட்டோம் என மேலும் தெரிவித்தார். இவ்விடயத்தில் பிரதமர் கவனஞ்செலுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்