மயிலிட்டி வைத்தியசாலை சேவைக்கு அரச அதிகாரிகள் தடை!- வைத்திய அதிகாரி சாடல்

இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட மயிலிட்டி காச நோய் வைத்தியசாலையினை புனரமைத்து சேவையினை ஆரம்பிப்பதற்கு அரச அதிகாரிகள் தடையாக உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட காசநோய் தடுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர். யமுனானந்தா இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

யாழில் இன்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், ”கடந்த வருடம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை தெல்லிப்பளை பிரதேச செயலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

எனினும் இந்த வைத்தியசாலையினை புனரமைத்து மீள ஆரம்பிப்பதற்கான எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் அரச அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. அக்காணியினை வேறொரு தேவைக்கு பயன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த வைத்தியசாலை ஆரம்பிப்பதன் மூலமே வடக்கில் காச நோயை கட்டுப்படுத்த முடியும். கடந்த வருடம் சுமார் 303 பேர் காச நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் 12 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் இந்த வருடம் சுமார் 66 பேர் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்