அடங்காப்பற்று-வன்னி வரலாற்று நூலுக்கு ‘உயர் இலக்கிய விருது’.

இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகமும், இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து அருணா செல்லத்துரை அவர்களின் வரலாற்று நூலுக்கு ‘உயர் இலக்கிய விருது’ வழங்கி கௌரவிக்க உள்ளது. திரு. சின்னத்தம்பி ஸ்ரீ இராமகிருஷ்ணா, திருமதி கமலநாயகி ஸ்ரீ இராமகிருஷ்ணா அவர்களின் ஞாபகார்த்தமாக இந்த உயர் இலக்கிய விருது வழங்கப்படுகிறது.

‘இரா.உதயணன் இலக்கிய விருது 2018’ ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா எதிர்வரும் 17ந் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30க்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் இடம் பெற இருக்கின்றது.

அருணா செல்லத்துரை : இதுவரை 15 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இதில் நான்கு  நூல்கள் இவர் கடமையாற்றிய வானொலி மற்றும் தொலைக்காட்சி போன்ற துறைகளுடன் தொடர்புபட்டது. இரண்டு நூல்கள் வன்னிப் பிரதேசம் சம்பந்தப்பட்ட நாடகங்களாகும். 6 நூல்கள் வன்னிப் பிரதேச வரலாறுகள் சம்பந்தப்பட்டது. பண்டாரவன்னியன் வரலாற்றுக்குத் தேவையான ஆய்வுகளைச் செய்து நூலாக வெளியிட்டுள்ளார்.

இந்த நூல்களுக்கு சாகித்திய மண்டல விருது, வடகிழக்கு மாகாண விருது, மற்றும் நந்தி உடையார் நாடக நூலுக்கு உண்டா அபிநந்தன தங்க விருது போன்றவை பரிசுகளாகக் கிடைத்துள்ளன. கலாசாரத் திணைக்களத்தினால் தொடர்பியல் வித்தகர், மற்றும் கலா விநோதன், போன்ற பல பட்டங்களையும், மற்றும் தமிழியல் விருது போன்றவற்றையும்  பெற்றுள்ளார்.

42 வருடங்கள் மின்னியல் ஊடகங்களில் கொழும்பில் கடமையாற்றி விட்டு, 2012ம் ஆண்டு தொடக்கம் வன்னிப் பெருநிலப்பரப்பில் தொல்லியல் ஆய்வுகளைச் செய்து வருகிறார். பெருநிலப்பரப்;பில்  காடுகளாக மாறியுள்ள பல பகுதிகளுக்குச்; சென்று 5100 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த இயக்கர் நாகர் கால தொல்லியல் சின்னங்களைப் புகைப்படம் பிடித்து ஆதாரங்களுடன் மூன்று  வருடங்களாக வீரகேசரிப் பத்திரிகையில் 111 கட்டுரைகளும், ஐந்துதலை நாக வழிபாட்டைப்பற்றி உதயன் பத்திரிகையில் 11 தொடர் கட்டுரைகளையும்  எழுதியுள்ளார். தொடர்ந்து ஆய்வுகளைச் செய்து பத்திரிகைகளில் கட்டுரைகளாக எழுதி  வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலக வரலாறுகளில் ஆபிரிக்க கண்டத்தில் உள்ள நீண்ட நைல்நதி, மற்றும் அமெரிக்க கண்டத்தில் ஓடும்; அமேசன் நதி போன்றவற்றின் கரைகளிலுள்ள வனப்பகுதிகளை, வரலாறு இல்லாத இருண்டகாட்டுப் பகுதிகளாக ஆரம்ப காலத்தில் குறித்திருந்தார்கள். அந்தப் பிரதேச வனங்களின் வளங்கள், செழிப்புகள் பற்றி ஆய்வுகள் செய்யப்பட்டு, எந்த விதமான பாரபட்சமும் இன்றி நூல்களும் கட்டுரைகளும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

ஆனால் இலங்கையின் வடபுலத்திலுள்ள பெருநிலப்பரப்புப் பற்றி எழுதப்படும் வரலாற்று நூல்களில் அடங்காப்பற்று – வன்னி பெருநிலப்பரப்பு ‘காடு’ என்றே 21ம் நூற்றாண்டிலும் குறிப்பிடப்படுகின்றது. இதனை நிலைநிறுத்துவது போன்று தற்போதும் பல கட்டுரைகள், வரலாற்றறிஞர்களாலும், பல்கலைக்கழக மட்டத்திலும் எழுதப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அடங்காப்பற்று-வன்னிப் பிரதேசத்தின் வரலாறு முழுமையாக ஆய்வு செய்து எழுதப்படாத நிலையில், தொட்டம் தொட்டமாக பலர் எழுதி வருகிறார்கள். இந்த விடயத்தில் மிகவும் அக்கறை கொண்டு சுமார் 25 வருடங்கள் ஆய்வு செய்து அவற்றை கட்டுரைகளாகவும் நூல்வடிவிலும் வெளியிட்டு வருபவர் அருணா செல்லத்துரையாகும்.

1963களில் முள்ளியவளை பாரதிஇலக்கிய மன்றத்தின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவராக இருந்த காலத்தில், மேடை நாடகங்களை எழுதி, மேடையேற்றி, முள்ளியவளை உறவுகளின்  பாராட்டுக்களைப் பெற்றிருந்தார்.

1968ம் ஆண்டுகளில் ‘பண்டாரவன்னியன்’ நாடகம் முல்லைமணி அவர்களால் முழுமையான மேடை நாடகமாக எழுதப்பட்ட பின்னர் வெளி மேடைகளில் நாடகமாக நடித்துள்ளார்.

1970 களில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கடமையாற்றிய போது பல விவரணச் சித்திரங்களையும் வானொலி நாடகங்களையும், மெல்லிசைப் பாடல்களையும், வானொலி மஞ்சரிக்கென சிறுகதை ஒன்றையும் எழுதியிருந்தார்.

1981ம் ஆண்டு தொடக்கம் இலங்கை ரூபவாகினிக் கூட்டுத்தாபனத்தில் கடமையாற்றியுள்ளார். 1993ம் ஆண்டில் ‘வீடு’ என்ற தலைப்பில் 1970 தொடக்கம் 1992 வரை எழுதிய ‘வானொலி நாடகங்களும்’ ‘தொலைக்காட்சி நாடகங்களும்’;, நூலாக வெளியிட்டு யாழ்-இலக்கியப் பேரவையின் 1994ம் ஆண்டுக்கான சான்றிதழையும் பெற்றிருந்தார்.

1994ம் ஆண்டு வானொலி மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றில்  ஒலி ஃ ஒளிபரப்பாகிய அவரின் ‘மெல்லிசைப் பாடல்கள்;’ புத்தக வடிவமாகியது.

1996ம் ஆண்டுகளில் ‘நந்தி உடையார்’ வன்னிப் பாரம்பரிய வரலாற்று நாடகம் நூல் வடிவில் வெளிவந்து பல பரிசில்களைப் பெற்றது. இதற்கென 1994ம் ஆண்டு  தொடக்கம் நாடக களத்திற்கான தகவல்களைத் தேடி 10 பக்க கட்டுரையாக நூலில் சேர்த்திருந்தார். சாகித்திய மண்டலப் பரிசு,  உண்டா அபிநந்தன தங்க விருது ஆகியன நாடக நூலுக்கு கிடைத்தது. அடங்காப்பற்று–வன்னி வரலாற்றுத் தகவல்களைத் தேடியபோது, வரலாற்றுக் குழப்பங்களையும், சிதைவுகளையும், காணக்கூடியதாக இருந்தது. இதன் காரணமாக தனது எழுத்தார்வம் அடங்காப்பற்று பிரதேச வரலாற்றுப் பக்கம் திரும்பியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

1996ம் ஆண்டுகளில் ‘இலங்கையில் தொலைக்காட்சி’ வரலாற்றுச்சுவடி புத்தகமாக்கப்பட்டது.

1997ம் ஆண்டு தொடக்கம் கனடா வன்னி நலன்புரிச் சங்கத்தினால் வெளியிடப்பட்ட முதலாவது ‘கொம்பறை’ சஞ்சிகைக்கு பண்டாரவன்னியன் வரலாற்றை எழுதியிருந்தார். தொடர்ந்து கொம்பறை சஞ்சிகைக்கு பெருநிலப்பரப்புப் பற்றிய பல வரலாற்றுக் கட்டுரைகளை எழுதி வருகிறார்.

2000மாம் ஆண்டில் ‘வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்’ என்ற நூலை எழுதியபோது  அதற்கெனவும் அடங்காப்பற்று- வன்னி பெருநிலப்பரப்புப் பற்றிய வரலாறுகளை ஆய்வு செய்து 08 பக்க வரலாற்றுக் கட்டுரையை நூலில் சேர்த்திருந்தார்.

2001ம்; ஆண்டு அவரால் எழுதித் தயாரிக்கப்பட்ட ‘அகதி முகாம்’ மேடை நாடகம் பதிப்பேறியது.

2002ம் ஆண்டில் கொழும்பில் இருந்த காலத்தில் அனைத்து நூலகங்களிலும் தமிழ் ஆங்கில வரலாற்று நூல்களைத்தேடி, ஆய்வுகளை மேந்கொண்டு அவற்றில்; இருந்து அடங்காப்பற்று-வன்னி வரலாற்றை பிரித்தெடுத்து ‘அடங்காப்பற்று-வன்னி வரலாறு’ பாகம் – 02, ‘பண்டார வன்னியன் வரலாறு’ எழுதப்பட்டு நூலாக வெளிவந்தது. முதலாவது பாகம் காலம் தாழ்த்தியே வெளியிடப்பட்டது.

2003ல் ‘பண்டார வன்னியன்’;-‘குருவிச்சி நாச்சியார்’ என்ற வரலாற்று நாடகம் நூலாக வெளிவந்தது. அதற்குப் பின்னர் அவரது ஆய்வுகள் முழுமையாக பெருநிலப்பரப்புப் பிரதேசத்தைப் பற்றியதாகவே இருந்தது.

2004ம் ஆண்டு ‘அடங்காப்பற்று வன்னி வரலாறு’ பாகம் 01, ‘கி.மு. – கி.பி.’ என்ற தலைப்பில் நூலாக எழுதியிருந்தார்.

2005ல் ‘பண்டார வன்னியன்’ வரலாறு இரண்டாவது பதிப்பை வெளியிட வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது.

2006ல் ‘அடங்காப்பற்று வன்னி வரலாறு’ பாகம் 03. ‘சுதேசத் தலைமைகள்’ என்ற நூல் வெளியிடப்பட்டது.

2007ம் ஆண்டு ‘அடங்காப்பற்று வன்னி வரலாறு’ பாகம் 04. ‘மாப்பாண – மடப்பளி வன்னியர்’ நூல் வெளிவந்தது.

2008ம் ஆண்டுகளில் ‘தொலைக்காட்சிச் செய்திகள் என்ற நூல் வெளிவந்தது.

2010ம் ஆண்டு ‘அடங்காப்பற்று–வன்னி வரலாறு’ பாகம் 05 ‘அடங்காப்பற்று முதலிமார்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.  கொழும்பு நூலகங்களில் வன்னி பற்றி தான் நடத்திய ஆய்வுகளே ஐந்து பாகங்களாக வெளியிடப்பட்டிருந்தன என்று குறிப்பிடுகிறார்.

2011ம் ஆண்டு அடங்காப்பற்று-வன்னிப் பிரதேசத்தில் இருக்கும் தொல்லியல் சின்னங்கள் சம்பந்தமான ஆய்வுகளை நேரடியாக களத்தில் இருந்து ஆரம்பித்து 2012ல் கொழும்பில் இருந்த அவரது நிரந்தர தளத்தை அவரது புகுந்தவீடான வவுனியாவிற்கு மாற்றி, பிரதேசத்திலிருந்த தொல்லியல் சின்னங்களை புகைப்படங்களாக எடுக்க ஆரம்பித்தார்.

2013ம் ஆண்டு தொடக்கம் புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், வவுனியா, கரைதுறைப்பற்று- (முல்லைத்தீவு), செட்டிகுளம்,  நெடுங்கேணி, மடு, ஆகிய பிரதேச செயலகங்களின் கலாசாரப் பேரவைகளால் வெளியிடப்பட்ட சஞ்சிகைகளுக்கு அடங்காப்பற்று-வன்னி பற்றி பல தலைப்புகளில்  கட்டுரைகளை எழுதி வருகிறார்.

2013ன் பிற்பகுதியில் இருந்து 2014ம் ஆண்டு முற்பகுதிவரை  மன்னாரில் இருந்து வெளி வந்த புதியவன் என்ற பிராந்திய பத்திரிகைக்கென பெருநிலப்பரப்பின் வடமேற்குக் கரையோரம் பற்றி ‘இலங்காபுரம்’  என்ற தலைப்பில் 11 வரலாற்றுக் கட்டுரைகளை தொடராக எழுதியுள்ளார்.

2013ம் ஆண்டு தொடக்கம் வவுனியாவில் நடைபெற்று வரும் பண்டாரம் வன்னியனார் ஞாபகார்த்த விழாக்களில் பண்டாரம் வன்னியனார் நினைவுப் பேருரைகளை தொடர்ச்சியாக நிகழ்த்தி வருகிறார்.

2014 தொடக்கம் 2016ம் ஆண்டு  வரையான காலப்பகுதியில்  பெருநிலப்பரப்புப் பிரதேசத்தில் புராதன காலத்தில் இருந்த இயக்கர்-நாகர் தொல்லியல் சின்னங்களைப்பற்றி வீரகேசரிப் பத்திரிகையில் ‘ஒரு ஊடகவியலாளனின் ஊடறுப்பு’ என்ற தலைப்பி;ல் தொடர்ச்சியாக 111 கட்டுரைகளை எழுதியிருந்தார்.

2016ம் ஆண்டு ‘அடங்காப்பற்று-வன்னியில் ஆதிகாலத் தமிழர் வரலாறு – நாகர் காலத்து தொல்லியல் சின்னங்கள்’ என்ற நூலை வெளியிட்ட போது, அறிஞர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பும், அங்கீகாரங்களும், விருதுகளும் கிடைத்தன. சாகித்திய மண்டல விருது, வடமாகாண இலக்கிய நூல் பரிசு, கொழும்பு கம்பன் கழகம் மற்றும் தமிழ்ச்சங்கம் ஆகியவற்றின்  கௌரவ விருதுகள் ஆகியன குறிப்பிடத்தக்கன. பெருநிலப்பரப்பு முழுவதிலும் உள்ள இயக்கர் நாகர் காலத்து தொல்லியல் சின்னங்களின் சுமார் 200 வர்ணப் புகைப்படங்கள் நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

புராதன வரலாறு இல்லாத பிரதேசமாக வரலாற்று அறிஞர்களால் குறிப்பிடப்படும் பெருநிலப்பரப்பின்  தொன்மையையும், அவற்றிற்கான தொல்லியல் ஆதாரங்களையும் எடுத்துக் காட்ட வேண்டும்; என்பதே அவரது நோக்கமாக இருக்கிறது.

2017ம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகைக்கு பெருநிலப்பரப்புப் பிரதேசத்திலிருந்த ‘ஐந்துதலை நாக வழிபாடு’ பற்றி வர்ணப் புகைப்படங்களுடன் 11 கட்டுரைகளை எழுதியுள்ளார்.

2018ம் ஆண்டு மன்னார் மாவட்ட செயலகத்தின் சஞ்சிகைக்கென மாதோட்டம் பற்றிய வரலாற்றுக் கட்டுரையை சுருக்கமாக எழுதியுள்ளார்.

2018ம் ஆண்டு தொடக்கம் ‘அடங்காப்பற்று-வன்னியில் ஆதிகாலத் தமிழர் வரலாறு’-தொகுதி-2, ‘இயக்கர் -நாகர் வாழ்புலங்கள்’, ‘மா-தோட்டம், திருக்-கேதீ-ச்சரம், மா-ந்தை’ என்ற நூலை எழுதி வெளியிடுவதற்கு தயாராக வைத்திருக்கிறார்.

1993ம் ஆண்டு தொடக்கம் அடங்காப்பற்று – வன்னிப் பிரதேச வரலாறுகளை எழுதியபோது, காலக்கிரமமாக எழுத வேண்டிய தேவையையும் அவசியத்தையும் உணர்ந்து கொண்டு  பெருநிலப்பரப்பின் வரலாற்றுத் தகவல்களை ஆண்டுக் கிரமமாக தொகுத்து வைக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

‘அடங்காப்பற்று-வன்னியில் ஆதிகாலத் தமிழர் வரலாறு’–தொகுதி – 02, ‘இயக்கர் – நாகர் வாழ்புலங்கள்’, ‘மா-தோட்டம், திருக்-கேதீ-ச்சரம், மா-ந்தை’, ஆகிய புராதன இடங்களின் வரலாறு சம்பந்தப்பட்ட தகவல்களை ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழி நூல்களில் இருந்து  தொகுத்து, அண்மைக்காலம் வரை தன்னால் சேகரிக்கப்பட்ட வரலாற்றுத் தகவல்களையும் உட்புகுத்தி ஆண்டுக்கிரமமாக எழுதியுளளதாக தெரிவிக்கிறார்.  முதல் முயற்சியான இந்த நூல், மேலும் பல நூல்களில் உள்ள தகவல்களைச் சேகரித்து முழுமையாக்க உதவும் என்பது அவரது நம்பிக்கை.

பெருநிலப்பரப்புப் பற்றி தமிழில் தனியாக எழுதப்படும் வரலாற்று நூல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை வாங்கி, ஆர்வலர்களுக்கும், மாணவ வாசகர்களுக்கும் நூலகங்களில் வைப்பதற்கு, தமிழ்ப் பிரதேச நூலகங்களில் நிதிப் பிரச்சனை உள்ளதாக தெரிவிக்கப்படுவது கவலையைத் தருகிறது என்ற ஆதங்கத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் வரலாறுகளை முழுமையாக ஆய்வு செய்வதற்கு நேரமில்லாத பலர்,  பெருநிலப்பரப்போடு சம்பந்தப்பட்ட புராண வரலாறுகளையும், வாய்வழித் தகவல்களையும், நாடகங்களையும், நாவல்களையும், அந்நியர் ஆட்சிக்காலம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது போன்ற விடயங்களில் பூரண தெளிவில்லாமல்  வரலாறுகளை எழுதி வருகிறார்கள். கற்பனை கலந்து எழுதப்பட்ட நாடக இலக்கிய நூல்களையும், நாவல்களையும் அடிப்படையாக வைத்து, அவற்றிற்கு ஏற்றவாறு வரலாறுகளை உருவாக்கி எழுதி வருபவர்களும் உள்ளனர் என்ற கவலையையும் வெளியிட்டுள்ளார்.

வரலாறு புதிதாக எழுதப்படுவதல்ல. ஏற்கனவே எழுதப்பட்டவற்றையும், அவற்றிற்கான தொல்லியல் சின்ன ஆதாரங்களையும் தொகுக்கும் போது வரலாறு முழுமை பெறும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமாகும். ஆதாரத் தகவல்களை திரிபுபடுத்திக் கூற முற்;பட்டால், எமது புராதனத்தின் இலக்கு தவறான திசைக்கு திரும்பி விடும் என்ற நிதர்சனத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

‘வரலாறு’ என்பது ஆய்வு செய்யப்பட்ட காலப் பகுதியில் அறிஞர்களுக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் எழுதப்படுவதாகும். கடந்த பல நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட வரலாற்று ஆய்வு நூல்களில் உள்ள பல விடயங்களை மேற்கோள் காட்டி பின்வந்த வரலாறுகள்  எழுதப்பட்டிருப்பது தெளிவாகிறது. காலத்திற்கு காலம் விரிவான ஆய்வுகள் இடம்பெறும்போது, ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வுகளில் மாற்றங்கள் ஏற்படுவது வழக்கம். அவற்றை ஏற்றுக் கொள்வதற்கான மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்வது எமது கடமையாகும் என்று கூறுகிறார்.

கொழும்புப் பல்கலைக் கழகத்தில் ஊடகவியல் கல்விகற்று தொடர்பியல் துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றுள்ள இவர் தொலைக்காட்சி பயிற்சி நிலையத்திலும், கொழும்பு பல்கலைக்கழக டிப்ளோமா பயிற்சி நெறிக்கும், ஊடகவியல் கல்லூரிக்கும் பகுதிநேர விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

இலங்கை கலாசாரத் திணைக்களம் முதன் முதலில் தொலைக்காட்சி வாழ்நாள் சாதனையாளர்களாக இருவரை தெரிவு செய்துள்ளது. அருணா செல்லத்துரை  அவர்களுக்கு தமிழ் மொழிக்கான தொலைக்காட்சி வாழ்நாள் சாதனையாளர் என்ற விருதினை வழங்கி; கௌரவித்துள்ளது.

2016ம் ஆண்டு டிசம்பர் மாதம்  ‘அடங்காப்பற்று-வன்னியில் ஆதிகாலத் தமிழர் வரலாறு, இயக்;கர் நாகர் கால தொல்லியல் சின்னங்களை 200க்கும் மேற்பட்ட வர்ணப் புகைப்படங்களுடன் நூலாக வெளியிட்டுள்ளார். இந்த நூலுக்கு 2016ம் ஆண்டுக்கான, மத்திய அரசின் ‘சாகித்திய மண்டல விருதும்’, வடமாகாண சபையின் ‘பல்துறை இலக்கிய நூல் விருதும்’ வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு கம்பன் கழகத்தினர் ‘நுழைபுலம் ஆய்வுக்கான விருதையும்’, கொழும்புத் தமிழ்ச்சங்கம் ‘தமிழ் நிதி’ என்ற கௌரவ பட்டத்தினையும், 2019ம் ஆண்டு ஐ.பி.சி.தமிழ் ஊடக நிறுவனம் கௌரவ விருதினையும் வழங்கிக் கௌரவித்துள்ளனர்.

‘உயர் இலக்கிய விருது’ அடங்காப்பற்று-வன்னி பெருநிலப்பரப்பின் வரலாற்றி;ற்கு வழங்கப்படும் மற்றுமொரு அங்கீகாரமாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்