பூகோள சுற்றாடல் பிரச்சினைகளுக்கான முக்கிய காரணியாக வறுமை – ஜனாதிபதி

பூகோள சுற்றாடல் பிரச்சினைகளுக்கான மிக முக்கிய காரணியாக வறுமை காணப்படுகின்றது என  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஐ.நா. சுற்றாடல் பேரவையின் நான்காவது கூட்டத்தொடர் கென்யாவின் நைரோபியில் நடைபெற்று வருகின்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபத இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு உரையாற்றுகையில், “காலநிலை மாற்றம் பற்றிய பிரச்சினைகளுக்கு எதிராக செயற்படுவதற்கு முன்னொருபோதும் இருந்திராத அளவு சர்வதேச அர்ப்பணிப்பை கொண்டுள்ள பரிஸ் உடன்படிக்கையில் இலங்கையும் கைச்சாத்திட்டிருக்கின்றது.

2019 ஆம் ஆண்டின் சர்வதேச காலநிலை இடர்சுட்டியில் எமது நாடு இரண்டாவது இடத்தில் பட்டியல் படுத்தப்பட்டிருக்கின்ற நிலையில் காலநிலை தொடர்பான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது எமக்கு மிகவும் முக்கியமானதாகும்.

பாதுகாப்பானதொரு சூழலில் வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதும் பேண்தகு பூகோள பொருளாதார சுட்டிகளை கட்டியெழுப்பும் சுற்றாடல் ரீதியான வளமான பொருளாதார போக்குகளை அறிமுகப்படுத்துவதும் எமது முதன்மையான பணியாகும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.

வறுமையானது பூகோள சுற்றாடல் பிரச்சினைகளுக்கான குறிப்பிடத்தக்கதொரு காரணியாகும் என நான் காண்கிறேன். சுற்றாடல் சீரழிவுகளும் வறுமையும் அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளில் பின்னிப்பிணைந்த இரு அம்சங்களாகும். மனித நடவடிக்கைகளினால் தூண்டப்பட்ட சுற்றுச்சூழல் சீரழிவுகள் வளி, நீர், சமுத்திரம், நிலம் மற்றும் அனைத்து வகையான சூழலியல் முறைமைகளையும் பாதிக்கின்ற பல்வகையான சவால்களை தோற்றுவிக்கின்றன.

மறுபுறத்தில் இந்த பிரச்சினைகள் புத்தாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பங்களை எமக்கு வழங்குகின்றன. எம்மைப் போன்ற தீவு நாடுகளை உள்ளடக்கிய நாடுகள் எதிர்கொண்டுள்ள பல்வேறு சவால்களுக்கு தீர்வாக அமையும் வகையில் ஐ.நா. சுற்றாடல் பேரவையின் நான்காவது கூட்டத்தொடருக்கான கருப்பொருள் தெரிவு செய்யப்பட்டிருப்பதையிட்டு நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன்.

ஐ.நா. சுற்றாடல் பேரவையின் மூன்றாவது கூட்டத்தொடருடன் இலங்கை “ஐ.நா. தூய சமுத்திரங்கள் திட்டத்தில்” இணைந்து தரை மார்க்கமாக சமுத்திரங்கள் மாசடைவதை குறைக்கும் நோக்குடன் ஒரு திட்டத்தினை அபிவிருத்தி செய்துள்ளது.

இயற்கை கலாசாரம் மற்றும் மரபுரிமைகளில் வளமான நாடு என்ற வகையில் எமது சமூக, பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கான இயற்கையோடு தொடர்புடைய பேண்தகு வர்த்தக துறைகளில் முதலீடு செய்வதையே நாம் விரும்புகிறோம்.

அந்த வகையில் ஐ.நா.சுற்றாடல் பேரவையின் நான்காவது கூட்டத்தொடர் அதற்கான ஒரு பலமான அடித்தளத்தை வழங்கியுள்ளது.

எதிர்வரும் மே மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள 18வது மாநாட்டிற்கான உபசரிப்பு வசதிகளை நாம் வழங்கவுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். சுற்றாடல் தொடர்பான முயற்சிகளில் முன்நின்று செயற்பட்டுவரும் ஐ.நா. சுற்றாடல் நிகழ்ச்சித்திட்டத்திற்கு எனது பாராட்டுக்களை தெரிவிக்கின்ற அதேநேரம், சிறந்த சுற்றாடல் முகாமைத்துவத்திற்காக இலங்கைக்கு வழங்கிவரும் பெறுமதிமிக்க ஒத்துழைப்புகளை நான் பாராட்டுகின்றேன்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்