கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இலங்கை உள்ளதாக சம்பிக்க தெரிவிப்பு

கடந்த காலங்களில் பெற்றுக்கொண்ட கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாய நிலையில், இலங்கை காணப்படுவதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மேலும், இதற்கான செயற்பாடுகளை அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருகோணமலையில், நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நாடு தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் தற்போது முன்வைக்கப்படுகின்றன.

அரசாங்கம் சரியில்லை என்றும் கடனில் நாடு தத்தளிக்கிறது என்றும் அரசியல்வாதிகள் ஊழல்வாதிகள் என தொடர்ச்சியாக விமர்ச்சிக்கப்படுகிறது.

சிலர், இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறிவருகிறார்கள்.

இலங்கையிலிருந்து வெளியேறிய பெரும்பான்மையான சிங்களவர்கள் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார்கள்.

அதேபோல், வடக்கிலிருந்து வெளியேறிய பெரும்பான்மையான தமிழர்கள் கனடாவில் குடியேறியுள்ளார்கள்.

இதிலிருந்தே எமது மக்கள் வெளியேறும் வீதம் எந்தளவில் உள்ளது என எமக்கு தெரிந்துக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது.

எனினும், கடந்த காலங்களை விட தற்போது தனிநபரின் வருமானம் அதிகரித்துள்ளது அதேபோல், கடன் சுமையும் அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த 2019ஆம் ஆண்டு வரவு- செலவுத் திட்டத்தின் ஊடாக மக்களுக்குத் தேவையான பல்வேறு நலத்திட்டங்களை நிதியமைச்சர் முன்மொழிந்துள்ளார்.

கடன் சுமையை குறைப்பதுதான் எமது பிரதான நோக்கமாகும். இதனை மேற்கொள்ளவே நாம் தற்போது பல்வேறு செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகிறோம்.

இதனை, திருப்பிச் செலுத்தாவிடின் நாடு நிச்சயமாக குழப்பகரமான நிலைமைக்கு தள்ளப்படும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்