விமர்சனங்களைக் கண்டு அஞ்சுபவன் நான் அல்லன்!

ஒரு ஜனநாயக நாட்டில் விமர்சனங்கள் இருக்கத்தான் செய்யும். அவை இருக்கத்தான் வேண்டும். ஒவ்வொருவரும் தத்தமக்கு ஏற்றாற்போல் கருத்துக்களை முன்வைப்பர். விடுதலைப் புலிகளின் காலம் வேறு. அந்தக் காலத்தில் விமர்சனங்களை முன்வைத்தால் அவர்களுக்கு என்ன நடக்குமென்பது அவர்களுக்கே நன்கு தெரியும். என்மீது தனிப்பட்ட ரீதியிலும் எமது கட்சிமீதும் பல விமர்சனங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இவற்றைக் கண்டு அஞ்சுபவன் நான் அல்லன். நாம் மக்களுக்குச் சரியானதையே செய்வோம்.
– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து ‘காலைக்கதிர்’ நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

இதுவும் அந்த மாற்றுச் சூழ்நிலையைச் சார்ந்தது. ஆயுதப் போராட்ட காலத்தில் விமர்சனங்கள் இருக்கா. விமர்சனம் எழுந்தால் அது வேறு விதமாகக் கையாளப்படும். ஆனால் ஒரு ஜனநாயக வழியில் விமர்சனம் என்பது கட்டாயமாக இருக்கும். அது இருப்பது ஓர் எதிர்மறையான விடயம் அல்ல. அது ஜனநாயக வழியில் நிச்சயமாக இருக்கவேண்டியதொன்றுதான்.
அதேபோல்தான் ஒற்றுமையைப் பற்றியும் பலரும் பேசுவதுமாக உள்ளது. அதாவது விடுதலைப்புலிகள் காலத்தில் ஒற்றுமையாக இருந்தவர்கள் பிரிந்து நின்று வெவ்வேறு விதமாப் பேசுகின்றார்கள் அல்லது செயற்படுகின்றனர் எனச் சொல்கின்றனர். நான் அண்மையில் இடம்பெற்ற ஒரு பொதுக்கூட்டத்தின்போதும் ஒற்றுமை தொடர்பில் சொல்லியிருந்தேன்.
அதாவது, விடுதலைப் புலிகள் காலத்தில் ஒற்றுமையைப் பேணுவது இலகுவானது. ஏனென்றால் அந்த ஒற்றுமையை உடைக்கின்றவர்களுக்கு என்ன கதி என்று அவர்களுக்குத் தெரியும். ஆனால்,  இன்றைய சூழ்நிலையில் அப்படிச் செயற்பட முடியாது. சகலருக்கும் என்ன விடயத்தையும் சொல்வதற்கான சுயாதீனம் இருக்கிறது.
ஆகவே, விடுதலைப் புலிகள் காலத்தில் இருந்தது இன்று இல்லை என்று அங்க லாய்ப் பது வெவ்வேறு சூழ்நிலைகளை ஒரே விதமாக ஒப்பிட்டுப் பார்ப்பது போன்றது. ஆகையால், அப்படிச் செய்யமுடியாது. இன்று நாங்கள் செயற்படுகின்றமை முழுவதுமே ஜனநாயகச் சூழலில்  ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில்தான்.
ஆகையால், ஒற்றுமையப் பற்றிப் பார்த்தால் வெளியில் இருந்து வருகின்ற விமர்சனங்கள் மட்டுமல்ல உள்ளே இருந்தும் விமர்சனங்கள் வருகின்றன. ஆக, விமர்சனங்கள் கட்டாயம் இருக்கத்தான் செய்யும்.
அதுவும் இந்த அணுகுமுறை யைச் சரியான விதத்தில் மக்கள் மத்தியில் விளங்கப்படுத்தாதமை காரணமாகத்தான் இருக்கவேண்டும். அது மட்டுமல்லாமல், கூட்டமைப்பில் இருக்கும் பலர் இன்னமும் ஆயுதப் போராட்ட காலத்தில் செயற்பட்டமையைப் போலச் செயற்பட விரும்புகின்றார்கள். அந்த விதமாகப் பேசுகிறார்கள்.
அப்படிச் செய்கின்றபோது அந்த அணுகு முறைக்கும் நான் எடுத்துள்ள அணுகு முறைக்கும் பல சந்தர்ப்பங்களில் பெரும் வித்தியாசங்கள் தென்படுகின்றன. அதன டிப்படையில்தான் தனிப்பட்ட ரீதியிலும் விமர்சனங்கள் எழுகின்றன என்று நான் நினைக்கின்றேன். ஆனால், என்மீது வருகின்ற விமர்சனங்களைக் கண்டு என்றைக்கும் அஞ்சுபவன் நான் அல்லன்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்