மூடிய அறையில் பேசும்போது தலையசைத்துவிட்டு மக்கள் ஆதரவுக்காக வெளியில் விமர்சிக்கிறார்கள் உள்வீட்டார் குறித்து சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கின்ற நிலைப்பாடுகள் தொடர்பில் நாங்கள் மூடிய அறைக்குள் தர்க்கரீதியாக தெளிவுபடுத்தும்போதும் – முடிவுகளை எடுக்கும்போதும் அனைவரும் தலையசைத்து அதற்கு இணங்குவார்கள்’ சம்மதிப்பார்கள். பின்னர் பொதுவெளியில் தமது தனிப்பட்ட ஆதரவுத் தளத்துக்காக எமது முடிவுக்கு மாறாக விமர்சிப்பார்கள்.
– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து ‘காலைக்கதிர்’ நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

கூட்டமைப்புக்கு வெளியில் இருக்கின்றவர்களும் அப்படித்தான் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். ஏனென்றால், அந்தப் பழைய சூழ்நிலையில் இருந்து இப்போது உள்ள சூழ்நிலை முழுவதுமாக மாறுபட்டது என்பதைப் புரிந்து கொள்ளாமலோ அல்லது அதனை ஏற்றுக்கொள்ளாத ரீதியில்தான் இந்த விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
கூட்டமைப்புக்குள்ளே இது குறித்து நாங்கள் பேசும்போது இணங்குவார்கள். அதில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. ஏனென்றால், தர்க்க ரீதியாக இந்த விடயங்களைப் பற்றி மூடிய அறைக்குள் நாங்கள் பேசும்போதும் எல்லோரும் இணங்குவார்கள். ஆனால், வெளியே போய் மக்கள் மத்தியிலே தங்கள் ஆதரவுத்தளம் நிலைத்து நிற்கவேண்டுமென்ற நோக்கத்துக்காகப் பழைய பாணியில் இயங்குவதைப்போல காட்டிக் கொள்வது தான் இதில் உள்ள பிரதானமான பிரச்சினை.
வெளியில் இருக்கிறவர்கள் முன்வைக் கும் விமர்சனம் நான் சொன்னதைப் போல பழைய அணுகுமுறையை இன்னமும் கைக்கொண்டிருப்பவர்கள். அவ்வாறு வெளியில் இருப்பது ஒரு சவாலே அல்ல. ஏனென்றால்,  அது குறித்து அவர்கள் அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அந்த பழைய பாணியில் செயற்படுகிறவர்களால் மக்கள் சார்பாக எதனையும் நகர்த்த முடியாது. சர்வ தேசமும் அவர்களின் செயற்பாட்டுக்கு ஆதரவு கொடுக்காது.  ஆகையால், அது குறித்து அலட்டிக் கொள்ளத்தேவையில்லை. வெளியில் இருப்பவர்களுக்கு அது சாதகமான நிலைப்பாடு. இன்னமும் இப்படித்தான் அவர்கள் இருக்கிறார்கள். நாட்டைப் பிரிக்கப் பார்க்கிறார்கள், இன்னமும் வன்முறையைத் தூண்டுகிறார்கள் என்று அவர்கள் சொல்வதற்கு ஏதுவாக இவர்கள் நடந்து கொள்கிறார்கள். ஆகையினால், அவ்வாறானவர்களை அவர்கள் விமர்சிப்பவர்கள் அல்லர்.
மாறுபட்ட இந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப நகர்வுகளை மேற்கொள்கின்ற என் போன்றவர்கள்தான் அவர்களின் பார்வைக்குக் கடினமானவர்களாக உள்ளோம்.
சுமந்திரனைச் சர்வதேசப் பார்வையில் தவறாகக் காண்பிக்கவேண்டும். அப்படிக் காண்பிக்காவிட்டால் அவர் சொல்வது சர்வதேசத்திடம் எடுபடுகின்றது. அதனைச் சரியென்று பல நாடுகள் நினைக்கின்றன. ஆகையால் அவரைத்தான் குறிவைத்துத் தாக்கவேண்டும் என்பதுதான் அவர்களது எண்ணம்.
 இவ்வாறான விமர்சனங்கள் குறித்து பெரிதாகக் கவலைப்பட்டவனும் நான் அல்லன். அதைப் பற்றி கோபித்துக் கொண்டவனும் அல்லன். அரசியலில் பொது வாழ்க்கைக்கு வந்தால் இதுவும் கூடவே வரும் என்பது எனக்குத் தெரியும். கட்சிக்கு எதிராக வரும் சவால்களை நான் அந்தந்த வேளையில்  அந்தந்த விடயங்கள் சம்பந்தமாகப் பதில்கள் சொல்லி நியாயப்படுத்திக் கொண்டுதான் வருகின்றேன்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்