அரசுக்கு முண்டுகொடுக்கத் தவறின் தமிழ் மக்களுக்கு பாதகமே ஏற்படும்!

அரசுக்கு நாம் முண்டுகொடுப்பது உண்மைதான். அவ்வாறு நாம் முண்டுகொடுத்து அரசைக் காப்பாற்றாதுவிட்டால் அது தமிழ் மக்களுக்குப் படுபாதகமாக அமையும். இந்த அரசு பெரிதாக எதுவும் செய்தது என்றும் சொல்லமுடியாதுதான். ஆனால் செய்யவில்லை என்றும் சொல்லமுடியாது. 50 வீதத்தையாவது எமது மக்களுக்காகச் செய்திருக்கின்றது. நாம் இப்படியே எல்லாத்தையும் கைவிடுவதா அல்லது இந்த 50 இலிருந்து முயற்சித்து 100 வீதத்தை மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதா என்பதுதான் கேள்வி. இந்த அரசு என்றைக்கும் தமிழ் மக்களுக்கு எதிரான அரசு அல்ல. அதை மக்கள் நன்கு புரிந்துள்ளார்கள். அதனால்தான், அவர்களாகவே பழைய அரசை வீட்டுக்கு அனுப்பினார்கள்.
– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து ‘காலைக்கதிர்’ நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

பழைய ஆட்சியில் நடந்த பல நிகழ்வுகள் தொடர்ந்தும் நடக்கின்றன. அதே போல பழைய ஆட்சியில் நடந்த பல நிகழ்வு கள் நடக்காமலும் விட்டிருக்கின்றன. ஆகவே, நூறு வீதம் அந்த நிலைமைகளை எங்களால் மாற்றக் கூடியதாக இருந்ததா என்று கேட்டால் அவ்வாறு நூறு வீதமாக மாற்றக்கூடியதாக இருக்கவில்லை. அது சரி ஐம்பது வீதமாவது மாற்றக் கூடியதாக இருந்திருக்கிறதா என்று கேட்டால் ‘ஆம்’ என்று கூறலாம்.
ஆனால், அதற்கும் கூடுதலாக நாம் இந்தப் புதிய ஆட்சியின் மூலமாக மாற்றக்கூடியதாக இருந்தது. ஆகையால், எங்களுக்கு முன்னால் உள்ள கேள்வி என்னவெனில், அரைவாசிதான் செய்து முடிக்கக்கூடியதாக உள்ள காரணத்தால் அதைக் கைவிட்டு, பழையபடி பழைய சூழ்நிலைக்குத் திரும்புவதா அல்லது மிகுதி ஐம்பது வீதத்தையும் சரி செய்வதற்குத் தொடர்ந்தும் முயற்சி செய்வதா என்பதே.
இரண்டாவது வழிமுறையைத்தான் நாம் பின்பற்றுகின்றோம். அதற்கமைய அரைவாசியை நாங்கள் மாற்றக்கூடியதாக இருந்திருக்கிறது. மிகுதியையும் மாற்றுவதற்கான முயற்சி செய்யப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால், இன்னமும் அது முழுமையாக மாற்றமடையவில்லை.
மேலோட்டமாக அதுதான் தென்படும். வழமையாக மக்கள் தங்களுக்கு எதிரான ஒரு நடவடிக்கை வந்தால், இதில் முன்னர் இருந்தது போன்றே இப்போதும் உள்ளது. இதில் என்ன வித்தியாசம் என்ற அங்கலாய்ப்பு வருவது சகஜம். ஆனால், அதே மக்கள் கொஞ்சம் இருந்து யோசித்துப் பார்த்தால் தெரியும். ஆயினும், கடைசிவரை முன்னர் இருந்த ஆட்சியை ஒருவரும் விரும்பவில்லை. கடந்த ஒக்ரோபர் மாதம் நடந்த சதித் திட்டத்தில் அது புலனானது.
அந்த விடயத்தில் எங்கள் மக்களுக்கு ஒருவரும் ஏதும் சொல்லிக் கொடுக்கவில்லை. ஆனால், எல்லோருமே  நாங்கள் அதனைத் தடுத்து நிறுத்துவதற்குச் செயற்பட்டமையை ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். ஏனென்றால், பழைய நிலைக்குத் திரும்பினால் என்ன நடக்குமென்று அவர்களுக்குத் தெரியும்.
ஆகவே, முழுமையாக எல்லாம் சரிவரா விட்டாலும் ஓரளவுக்காவது நிலைமையை நாங்கள் சீர்செய்திருக்கிறோம் என்பதை எங்கள் மக்கள் அறிவார்கள். அந்த மிகுதி முயற்சியிலேயேயும் நாங்கள் வெற்றி பெற வேண்டும்.
ஆனால், மிகுதி முயற்சியில் வெற்றி பெறா விட்டாலும் கூட இந்த மாற்றம் அதாவது நாங்கள் கொண்டு வந்த ஆட்சி மாற்றம், மக்களுக்கு பிரயோசனமாகத்தான் இருந்திருக்கிறதே தவிர மக்களுக்கு எதிரானதாக அது எப்போதுமே இருந்திருக்கவில்லை.
ஆதலால் இந்த அரசாங்கத்தைத் தொடர்ந்தும் முண்டுகொடுத்து வைத்திருக்கவேண்டிய நிலை எமக்கு .இருக்கின்றது. அதுதவறினால், தமிழ் மக்களுக்கு மிகமிகப் பாதகமான நிலைமைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மக்களும் மாற்று அரசை விரும்பவில்லை என்பதும் தெளிவாக எமக்குப் புலப்படுகின்றது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்