மறதி பிடித்த ரெலோ!

ஐ.நா. மனித உரிமைகள் மாநாடு தொடர்பில் கடந்த வாரம் நாம் கூட்டமைப்பாகச் சந்தித்துப் பேசினோம். அதில் எந்தக் கட்சியும் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருக்கவில்லை. கால நீடிப்பு என்ற சொல் தவறானது. சர்வதேசத்தின் மேற்பார்வையே சரியானது என்று நாள் தெளிவுபடுத்தியபோது பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ ஏன் இதை முதலே சொல்லியிருக்கலாமே என்றார்கள். நான் அவர்களைப் பார்த்துக் கேட்டேன் இரண்டு வருடங்களுக்கு முன்னர் 2017 ஆம் ஆண்டுகூட நாம் வவுனியாவில் சந்தித்து இந்த விடயம் தொடர்பில் பேசியுள்ளோமே! ஏன் உங்களுக்கு மறதியா? என்றேன். அதற்கு அவர்கள் பதில் ஏதும் பேசாமல் மௌனிகளாக இருந்தார்கள்.
இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து ‘காலைக்கதிர்’ நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

போர்க்குற்ற விசாரனை தொடர்பில் ரெலோ மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவிக்கின்றமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கின்றபோது, அடிக்கடி இப்படியான குழப்பங்கள் கட்சிக்குள் வருவதும் சகஜமாகப் போய்விட்டது. ஆனால், கூட்டமைப்பு ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் சென்ற வாரம் நடைபெற்றபோது ரெலோவும் பங்கு பற்றியிருந்தது. அதில் இந்த விடயங்கள் பற்றிப் பேசப்பட்டன. அதன்போது நாங்கள் சொன்ன விளக்கங்களை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
அதாவது இந்தக் கால அவகாசம் என்பது தவறான சொற்பிரயோகம் என்று சொன்ன போதும் அதை ரெலோ ஏற்றுக்கொண்டது. இதனை முதலிலேயே எங்களுக்குச் சொல்லியிருந்தால் நல்லதுதானே என்று அவர்கள் கூறினார்கள். கடந்த 2017 ஆம் ஆண்டு  மார்ச் மாதத்திலும் இதே விடயங்களைத் தான் நாங்கள் விவாதித்தோம். கால அவகாசமா அல்லது சர்வதேச மேற்பார்வையா என்பது குறித்து நாங்கள் வவுனியாவில் சந்தித்து ஒரு நாள் முழுவதும் அதனைப் பற்றிப் பேசி ஒரு தீர்மானம் எடுத்திருந்தோம் என்று நான் பதிலளித்தேன்.
ஆகவே, அதே விடயம்தான் இப்போதும் பேசப்படுகிறது. இவ்வாறான நிலையில் இதனை முதலில் பேசியிருக்கலாம் என்று சொல்கின்றமை பொருத்தமில்லை. உண்மையில் இது தொடர்பில் இரண்டு வருடங்களுக்கு முன்னரே பேசிவிட்டோம். உங்களுக்கு மறதியா? திரும்பத் திரும்பப் பேசவேண்டுமா? என்று நான் கேட்டபோது அதற்கு அவர்கள் பதில் சொல்லவில்லை. அதனால் நாங்கள் எடுத்துக்கொண்ட நிலைப்பாட்டோடு ரெலோவினரும் இணங்கினார்கள்.
கூட்டமைப்பு எடுக்கும் நிலைப் பாட்டுக்கு மாறுபட்ட நிலைப்பாடுகளை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தி வரும் பங்காளிக் கட்சியான ரெலோ கூட்டமைப்பில் இருந்த வெளியேற எத்தனிக்கிறதா? என்ற கேள்விக்குப் பதிலளித்த சுமந்திரன், அவர்கள் அவ்வாறு வெளியேறப்போவதில்லை. கடந்த 2017 மார்ச்சிலும் இப்படியான கருத்துக்கள் ரெலோவில் இருந்தும் வந்தன. ஆனால், நாங்கள் எல்லோரும் ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்து சந்தித்த போது ஒரே நிலைப்பாட்டுக்கு அவர்கள் இணங்கினார்கள். அதேபோலவே சென்ற வாரமும் நடந்திருக்கின்றது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்