சிலாவத்துறை மக்களின் தொடர் மண்மீட்புப் போராட்டம்

சிலாவத்துறையின் மக்கள் குடியிருப்புப் பகுதியில் நிலைகொண்டுள்ள கடற்படையினர் அங்கிருந்து வேறு பொருத்தமான இடத்திற்கு நகர வேண்டுமெனக் கோரி சிலாவத்துறை மக்கள் கடற்படை முகாமுக்கு முன்பாக கடந்த பெப்ரவரி 20 ஆம் திகதி முதல் தொடர் போராட்டமொன்றை நடத்தி வருகின்றனர்.
ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்று வரும் இவ்வேளை சிலாவத்துறை மக்களின் மண்மீட்புப் போராட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

1990 ஆம் ஆண்டு யுத்த காலத்தில் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது சிலாவத்துறையைச் சேர்ந்த சுமார் 220 குடும்பங்கள் புத்தளம், கல்பிட்டி மற்றும் கொழும்பு போன்ற இடங்களில் தஞ்சமடைந்திருந்தனர்.

2009 இல் யுத்தம் முடிவடைந்த பின்னர் மீள்குடியேற வந்த சிலாவத்துறை மக்கள் தமது பாரம்பரிய பூர்வீக பூமியில் கடற்படையினர் முகாமமைத்துள்ளமை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தற்போது சுமார் 800 குடும்பமாகியுள்ள சிலாவத்துறை மக்களில் சுமார் 250 குடும்பங்கள் கடற்படை முகாமைச் சுற்றி மீளக்குடியமர்ந்துள்ளனர். ஏனையோர் மீளக்குடியேறக் காத்திருக்கின்றனர்.

வட மாகாணத்தில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரேயொரு பிரதேசம் முசலி. அதன் தலைநகர் சிலாவத்துறை. இங்கு சுமார் 36 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட – மக்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த வளமிக்க பிரதேசத்திலேயே இப்போது கடற்படையினர் நிலைகொண்டுள்ளனர். ஏற்கனவே சிலாவத்துறை வைத்தியசாலை அபிவிருத்திக்கென மக்கள் பெறுமதிமிக்க பெருமளவிலான காணிகளை இழந்துள்ளனர்.

சிலாவத்துறை மக்களின் மீள்குடியேற்றத்தைக் கருத்திற் கொண்டு கடற்படையினருக்கென சுமார் 3 கிலோ மீற்றருக்கு அப்பால் இடம் ஒதுக்கப்பட்டது. எனினும் சிலாவத்துறையிலிருந்து கடற்படையினர் நகராமல் அப்புதிய இடத்தையும் பிடித்து முகாமமைத்துள்ளனர்.

சிலாவத்துறை நகர் மத்தியில் – மக்கள் நெரிசலாக வாழக்கூடிய இடத்தில் மக்களின் அமைதி வாழ்க்கைக்கு முற்றிலும் அச்சுறுத்தலான விதத்தில் மக்களின் காணிகளில் கடற்படையினர் நிலைகொண்டுள்ளமை யுத்த சூழலற்ற இக்காலத்தில் எந்தத் தேவையுமற்றது. இதற்காகக் கூறப்படும் எந்தக் காரணமும் பொய்யானது.
கடற்படையினர் வசமுள்ள சிலாவத்துறை மக்களின் காணிகள் தமக்கு விரைவில் கிடைக்கும் என நம்பியே மக்கள் ஒரு தசாப்த காலமாக எவ்வித போராட்டத்தையும் மேற்கொள்ளாது சலிப்படைந்து போயினர். கடந்த காலங்களில் அரசுக்கு நெருக்கடி கொடுக்காத முறையில் – ஜனநாயக ரீதியாக போஸ்ட் கார்ட் போராட்டம் நடத்தினர். பல்வேறு தரப்பினரின் கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தனர். எதுவும் பிரயோசனம் அளிக்கவில்லை.

சிலாவத்துறை மக்கள் இக்காணிக்காக எந்தவித மாற்று ஏற்பாட்டையும் நஷ்டஈட்டையும் நிராகரித்துள்ளனர். அண்மையில் 36 ஏக்கர் காணியில் சுமார் 6 ஏக்கர் விடுவிக்கப்பட்ட போதும் அதனை இதுவரை மக்கள் பொறுப்பேற்காததுடன் தமது காணியை முழுவதுமாகக் கேட்டு நிற்கின்றனர்.

கடற்படை முகாம் அமைந்திருக்கும் நிலமானது மக்கள் வாழ்க்கைக்குப் பொருத்தமான நீர்வளம் கொண்டதாகும். அதனைச் சூழ தற்போது மக்கள் குடியிருப்பது உவர் நீர் கொண்ட வளம் குறைந்த இடமாகும்.
ஒரு காலத்தில் உலகளவில் முத்துக் குளிப்புக்கு சிலாவத்துறை புகழ்பெற்று விளங்கியது. எகிப்து இளவரசி கிளியோ பட்ரா சிலாவத்துறை முத்து அணிந்திருந்ததாக வரலாறு கூறுகிறது. சிலாபம் என்றால் முத்து என்பது பொருளாகும். இலங்கையில் சிலாபம் என்றொரு இடம் புத்தளம் மாவட்டத்தில் உள்ளதால் மன்னார் மாவட்டத்திலுள்ள இவ்வூர் முத்துச் சிலாபம் என்றும் முத்துச் சிலாவத்துறை என்றும் அழைக்கப்படுகிறது. முத்துக் குளிக்கும் அக்காலத்தில் சிலாவத்துறை ஒரு பெரும் பட்டணமாகக் காட்சியளிக்குமென வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

1921 ஆம் ஆண்டு இலங்கையில் நிறுவப்பட்ட முதல் 6 உப தபால் அலுவலகங்களில் சிலாவத்துறையும் ஒன்றாகும். கடற்படையினர் நிலைகொண்டுள்ள இடத்திலேயே 1990 வரை அத்தபாலகம் இயங்கியது. இப்போது எவ்வித வசதியுமற்ற ஒரு பாழடைந்த கட்டடமொன்றில் இத்தபாலகம் தற்காலிகமாக இயங்கி வருகிறது.

கடற்படையினர் முகாமமைத்துள்ள ஒரு பக்கம் பாடசாலையும் இன்னொரு புறம் வைத்தியசாலையும் உள்ளன. அதனருகில் பழைய இராணுவ முகாமும் புதிதாக பொலிஸ் நிலையமும் அமையப் பெற்றுள்ளன. மொத்தத்தில் ஆயுதமேந்திய படைகளின் மத்தியில் – தொடர்ந்தும் யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஒரு சூழலில் வாழ்வதாகவே சிலாவத்துறை மக்கள் உணர்கின்றனர்.
அண்மையில் அரசாங்கம் மன்னார் மாவட்டத்தில் மக்களுக்கு அவசியமில்லாத சில இடங்களை இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துள்ளது. எனினும் சிலாவத்துறை போன்ற மக்கள் கேட்டு நிற்கும் – மக்களின் காணிகளை விடுவிப்பதே நாட்டின் அபிவிருத்திக்கும் உண்மையான சமாதானத்துக்கும் உதவும்.
சிலாவத்துறை மக்கள் போராட்டம் நடத்தும் இடத்திற்கு அரசியல் தரப்பினர், சமூக – சமய – மனித உரிமை அமைப்பினர் என்று பலரும் வந்து செல்கின்றனர். அமைச்சர் ரிசாட் பதியுதீன் (யுஊஆஊ), பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் (வுNயு), பாராளுமன்ற உறுப்பினர்களான கே. காதர் மஸ்தான் (ளுடுகுP), விமல் ரத்நாயக (துஏP) ஆகியோர் போராட்ட களத்திற்கு நேரடியாக வந்து மக்களைச் சந்தித்துள்ளனர். போராட்டக் குழுவினர் வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவனை வவுனியாவில் சந்தித்துப் பேசியுள்ளனர்.

வடக்கு, கிழக்கில் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி ‘காணி உரிமைக்கான மக்கள் இயக்கம்’ நடத்திய 5 நாள் வாகனப் பேரணியின் 3 ஆம் நாள் (28.02.2019) சிலாவத்துறை மக்களின் மண்மீட்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிலாவத்துறை நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
சிலாவத்துறை மக்கள் தமது மூதாதையரின் மூச்சுக் கலந்த சிலாவத்துறை தமக்கு முழுவதுமாக வேண்டுமெனக் கோரி தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஐ{ம்ஆத் தொழுகையின் பின்னர் கடற்படை முகாமுக்கு முன்னால் ஆர்ப்பாட்ட ஊர்வலம் செல்கின்றனர். இதன் தொடர்ச்சியாக 2019.03.15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாபெரும் பேரணியொன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ள போராட்டக் குழுவினர் தமது பூர்வீக பூமியைப் பெற்றுக்கொள்ள அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்த்து நிற்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்