ஏறாவூரில் திடீர் தீ பரவல் – வீடு தீக்கிரை

மட்டக்களப்பு – ஏறாவூரில் ஏற்பட்ட திடீர் தீ பரவலில் வீடொன்று தீக்கிரையாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்றது.

இந்த சம்பவத்தில் வீடும் அதன் உடமைகளும் முற்றாக எரிந்து சாம்பலாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் நகர மத்தி முனைவளவு வீதியை அண்மித்துள்ள வீடொன்றே இவ்வாற தீக்கிரையாகியுள்ளது.

குறித்த வீட்டில் நீண்ட காலமாக வசித்து வந்த வாடகைக் குடியிருப்பாளர்கள் சம்பவ தினத்திற்கு முதல்நாள் ஏறாவூரிலிருந்து தம்பாளை எனும் ஊருக்குச் சென்றிருந்த வேளையிலேயே வீட்டில் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றது.

தீ பரவலை அவதானித்த அயலவர்கள் உடனடியாக பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து மட்டக்களப்பு மாநகர சபையிலிருந்து தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

தீயணைப்பு பிரிவினருடன் இணைந்து பொதுமக்களும் ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தியுள்ளனர்.

சுமார் ஒரு மணித்தியாலப் போராட்டத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தீ பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்