24 மணி நேரத்துக்குள் இந்தியாவிலும் இலங்கையிலும் மலிங்க 10 விக்கெட்

24 மணிநேரத்துக்குள் இந்தியாவிலும், இலங்கையிலும் இரு வேறு மைதானங்களில் விளையாடி லசித் மலிங்க 10 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

பி.சி.சி.ஐ.யின் கோரிக்கைக்கு அமைவாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் அனுமதியுடன் ஐ.பி.எல். போட்டியில் கலந்துகொண்ட லசித் மலிங்க, மும்பை அணிக்காக மூன்று போட்டிகளில் விளையாடினார்.

இதில் நேற்று இடம்பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மலிங்க சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி மும்பை அணியின் வெற்றிக்கு பெரும் பங்களிப்பாற்றியிருந்தார்.

இந் நிலையில் இன்று ஆரம்பமான உலகக்கோப்பை கிண்ணத்துக்கான இலங்கை அணியை தெரிவுசெய்யும் 50 ஓவர்களை கொண்ட சூப்பர் ஃபோர் மாகாண மட்ட போட்டிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று நள்ளிரவே மலிங்க இந்தியாவிலிருந்து புறப்பட்டு இலங்கையை வந்தடைந்தார்.

இந் நிலையில் இன்று ஆரம்பான மலிங்க தலைமையிலான காலி அணிக்கும், திமுத் கருணாரத்ன தலைமையிலான கண்டி அணிக்கும் இடையிலான போட்டியில் காலி அணி 156 ஓட்டத்தினால் அபார வெற்றிபெற்றிருந்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய காலி அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுக்கைளயும் இழந்து 255 ஓட்டங்களை குவித்தது.

256 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கண்டி அணி 18.5 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 99 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 156 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

இப் போட்டியில் லசித் மலிங்க 9.5 ஓவர்களுக்கு பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு 49 ஓட்டங்களை வழங்கி 7 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

அதன்படி மலிங்க 24 மணி நேரத்துக்கு இருவேறு நாடுகள், இருவேறு மைதானங்கள், இருவேறு சூழல்களில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

இதன் மூலம் மலிங்க தனது உடல் தகுதியை மீண்டும் நிரூபித்து காட்டியுள்ளமை குறிப்படத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்