பிரபாகரனின் பேச்சைக்கேட்டிருந்தால் இந்தநிலை ஒருபோதும் ஏற்பட்டிருக்காது – அரசாங்கம்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பேச்சைக்கேட்டிருந்தால் இன்று முஸ்லிம் மக்கள் மன்னாரில் வாழ்ந்திருப்பார்கள் என ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

2019ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு, மகாவலி மற்றும் சுற்றுசூழல் அபிவிருத்தி அமைச்சு மீது நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் பேசிய அவர், “வில்பத்து சரணாலய பிரதேசத்தில் முஸ்லிம் மக்கள் குடியமர்த்தப்பட்டிருப்பதாக தெரிவித்து சமூகத்தை பிழையாக வழிநடத்த சிலர் முயற்சிக்கின்றனர்.

வில்பத்து சரணாலயம் அமைந்திருப்பது அனுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்டத்திலாகும். எனினும், தற்போது மக்கள் மன்னார் மாவட்டத்துக்கு உட்பட்ட பிரதேசத்திலேயே குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பேச்சைக்கேட்டிருந்தால் இன்றும் முஸ்லிம் மக்கள் மன்னாரில் வாழ்ந்திருப்பார்கள். எனினும், நாட்டின் ஒற்றையாட்சியை பாதுகாப்பதற்காக செயற்பட்டதாலே விடுதலைப்புலிகளால் விரட்டப்பட்டார்கள்” என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை வடக்கில் இருந்து விடுதலைப் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டவர்களா வில்பத்தை அண்மித்த பிரதேசங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் என்பது குறித்து ஆராய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்