தமிழரசு கட்சியின் 16வது தேசிய மகாநாடு இம்முறை யாழ்ப்பாணத்தில் – இம் மகாநாட்டில் தமிழர்களின் பிரச்சினைக்கு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்

இலங்கை தமிழரசு கட்சியின் 16வது தேசிய மகாநாடு இம்முறை யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறை கீரிமலை பிரதேசத்தில் மிகவும் உணர்ச்சிபூர்வமாக கொண்டாடப்படவுள்ளதுடன் இம் மகாநாட்டில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைகள் தொடர்பான முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாகவும் தமிழரசு கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் கட்சியின் மகாநாடு தொடர்பாக தெளிவூட்டும் கலந்துரையாடல் கூட்டம் பொத்துவில் தொகுதி தலைவர் ஏ.கலாநேசன் தலைமையில் இன்று 11 வியாழக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தினைத் தொடர்ந்து அங்கு இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்படி கருத்தினை தெரிவித்து இருந்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

தமிழரசு கட்சியின் தேசிய மகாநாடு இம்முறை யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கீரிமலை பிரதேசத்தில் இடம்பெறவுள்ளதுடன் அங்கு தமிழ் மக்களின் இனப்பிரச்சினைகள் தொடர்பான முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.

இம் மகாநாடானது கட்சியின் ஸ்தாபகரான தந்தை செல்வாவின் நினைவு தினத்துடன் 26ந் திகதி காலை ஆரம்பமாகி மாலை தமிழரசு கட்சியின் செயற்குழு கூட்டம் இடம்பெற்று 27ந் திகதி புதிய நிர்வாகிகளை கொண்ட செயற்குழு கூடவுள்ளதுடன் மாலை மகளிர் அணி மகாநாடு, இளைஞர் அணி மகாநாடு என்பன இடம்பெற்று 28ந் திகதி காலையில் மகாணங்களில் இருந்த கிடைக்கும் கோரிக்கைள் ஆராயப்பட்டு அன்று மாலை தமிழரசு கட்சியின் மகாநாடு இடம்பெறவுள்ளதாக மாவை சேனாதிராசா மேலும் தெரிவித்து இருந்தார்.

இக்கூட்டத்தில் தமிழரசு கட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாணசபை அமைச்சர் கே.துரைராஜசிங்கம், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கே.ஜெயசிறில், தமிழரசு கட்சியின் திருக்கோவில் பிரதேசசபை உறுப்பினர்கள், கட்சியின் நிருவாகிகள், கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்