மீண்டும் ஆட்சிக் கவிழ்ப்பு; தயாராகிறாராம் மைத்திரி

எதிர்வரும் நவம்பர் – டிசம்பர் மாதங்களுக்குள் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக தற்போதைய அரசைக் கவிழ்ப்பதற்கான மற்றொரு முயற்சியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ளவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

இதற்கமைய தற்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஐ.தே.கவின் ஒரு பகுதி உறுப்பினர்களை இணைத்து 113 உறுப்பினர்களின் பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சியமைக்கும் திட்டம் ஒன்று உள்ளது எனக் கூறப்படுகின்றது

இந்தத் திட்டத்துக்கு ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இரண்டு உறுப்பினர்கள் மாத்திரமன்றி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பலரும் ஆதரவு அளிப்பார்கள் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்

கடந்த ஒக்டோபரில் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க நீக்கப்பட்டபோது ஐ.தே.க. உறுப்பினர்கள் பலரும் ஜனாதிபதிக்கு ஆதரவு அளிக்கத் தயாராக இருந்தனர் என்றும் ஆனால் சர்ச்சைகளுக்குள்ளாகி இருந்த மஹிந்தவை பிரதமராக்கியமையால் ஏற்பட்ட குழப்பத்தால் அது பலனளிக்கவில்லை என்றும் ஐ.தே.கவின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்

அண்மைக்காலத்தில் ஐ.தே.கவின் அமைச்சர்கள் சிலரை ஜனாதிபதி பாராட்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது – என்று அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்