கீரிமலையில் 4 பேர் கைது; கத்திகள், கோடரியும் மீட்பு!

சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய 4 பேர் காங்கேசன்துறைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து 3 கத்திகளும், கைக்கோடாலி ஒன்றும், ஸ்குரு ரைவர், சுத்தியல் போன்ற பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.
கீரிமலைப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாகக் கூடி நின்றவர்களிடம் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். அதன்போதே அவர்களிடம் இருந்து இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன் 20 ரூபா நாணயத்தாள்கள் 200 மற்றும் 100, 500, 1000 நாணயத்தாள்கள் என அவர்களிடம் இருந்து 19 ஆயிரத்து 500 ரூபா மீட்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
நேற்றுக் காலை கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றில் நேற்று மாலை முற்படுத்தப்பட்டனர். அவர்களை எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டது.
அதேவேளை, கீரிமலைப் பிரதேசத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் நேற்று உண்டியல் உடைத்துத் திருட்டு நடைபெற்றுள்ளது. அத்துடன் சில தினங்களுக்கு முன்னர் பிரதேச சபைக்குச் சொந்தமான விளம்பரப் பதாகை ஒன்று சேதமாக்கப்பட்டிருந்தது. நேற்றுக் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு இந்தச் சம்பவங்களுடன் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்