மானிப்பாயில் 8 பேர் அதிரடியாகக் கைது! – வாள்களுடன் பலரின் ஒளிப்படங்களும் சிக்கின

பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பாக யாழ். மானிப்பாயில் 8 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் 3 வாள்கள், இரு மோட்டார் சைக்கிள்கள், சுழியோடிகள் பயன்படுத்தும் முகக் கண்ணாடிகள் என்பவையும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்

அண்மைய நாட்களில் மானிப்பாயில் வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்திருந்தன அதையடுத்து வடக்கு மாகாண மூத்தப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ விசேட கவனம் எடுத்திருந்தார் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்வதற்கான விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன

புத்தாண்டு விடுமுறைகளையும் தவிர்த்துப் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் தொடர்ச்சியாக நேற்றுச் சந்தேநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

கைதுசெய்யப்பட்டவர்களின் அலைபேசிகளில் இருந்து ஏராளமான ஒளிப்படங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன வாள்களுடன் பல பேரின் ஒளிப்படங்களும், பெயர்கள் பொறிக்கப்பட்ட வாள்களின் ஒளிப்படங்களும் கிடைத்துள்ளன என்று தெரிவித்துள்ள பொலிஸார் அவற்றின் அடிப்படையிலும் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்கின்றனர்

கைதுசெய்யப்பட்டவர்களுக்கும் தற்போது வாள்வெட்டுக் குற்றச்சாட்டில் சிறையில் உள்ள விக்ரர் என்ற நபருக்கும் வேறு குழுக்களுக்கும் இடையே தொடர்புகள் உள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது

விக்ரர் என்ற நபரின் பெயர் பொறிக்கப்பட்ட வாள்களின் ஒளிப்படங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று தெரிவித்த பொலிஸார் ஒளிப்படங்களை ஆதாரமாகக் கொண்டு இன்னும் பலர் தேடப்பட்டு வருகின்றனர் இந்தக் குழுவின் பிரதான நபர் என்று கருதப்படும் கைதடியைச் சேர்ந்த ஒருவரும் தேடப்பட்டு வருகின்றார் இவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டனர்

வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ நேற்று மானிப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு நேரில் சென்று விசாரணைகளைக் கண்காணித்தார் பொலிஸார் எடுக்க வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனைகளை வழங்கினார் ஒளிப்படங்கள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ள சந்தேகநபர்களை உடனடியாகக் கைதுசெய்வதற்கான பணிப்புரைகளையும் பொலிஸாருக்கு அவர் வழங்கியுள்ளார்

கைதுசெய்யப்பட்டவர்களை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்