மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் 69.55% வாக்குப்பதிவு

இந்திய மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.

தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு இடம்பெற்றதுடன், பாரிய அசம்பாவிதங்கள் எவையும் பதிவாகவில்லை.

மேலும், இன்று மாலை 5 மணி வரையில் தமிழகத்தில் 69.55 சதவீத வாக்குப்பதிவு இடம்பெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

5 மணி நிலவரப்படி அதிகபட்சமாக சிதம்பரத்தில் 70.73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 55.07 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. சட்டமன்ற இடைத்தேர்தலில் 67.08 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

அஸ்ஸாமில் 73.3 வீதமும் பீஹாரில்  56.2 வீதமும் சட்டிஸ்கரில் 68.7 வீதமும் ஜம்மு – காஷ்மீரில் 43.3 வீதமும் மஹாராஷ்ட்ராவில் 57.2 வீதமும் ஒடிஷாவில் 64 வீதமும் உத்தரபிரதேசத்தில் 58.6 வீதமும் மேற்கு வங்காளத்தில் 76.1 வீதமும் கர்நாடகாவில்  61.8 வீதமும் மணிப்பூரில்  74.3 வீதமும் புதுச்சேரியில் 73 வீதமும் வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளது.

5 மணி வரையான நிலவரப்படி மேற்கு வங்காளத்திலேயே அதிகப்படியான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், வேலூர் தொகுதிக்கான தேர்தல் இரத்து செய்யப்பட்ட நிலையில், 38 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும், புதுச்சேரி தொகுதிக்கான வாக்குப் பதிவும் இன்று நடைபெற்றது.

இன்று காலை முதல் வாக்காளர்கள் நீண்டவரிசையில் நின்று தமது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியிருந்தனர்.

பல இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சில மணித்தியாலங்கள் தாமதமாக வாக்குப்பதிவு நடைபெற்றிருந்ததாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் , திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவி தமிழிசை சௌந்தர்ராஜன் ஆகியோர் இன்று வாக்களித்தனர்.

தமிழ் திரையுலக பிரபலங்களும் வாக்காளர்களுடன் தமது வாக்கினை பதிவு செய்தனர்.

முன்னாள் தமிழக முதல்வர்களான மு.கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஜெயராம் ஆகியோர் மறைந்த நிலையில், இம்முறை தேர்தல் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

இன்று வாக்களித்து திரும்பிய 6 வாக்காளர்கள் பல்வேறு காரணங்கள் காரணமாக உயிரிழந்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்கத்தில் வேட்பாளர் ஒருவரது கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நரசிம்ம ராவ் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திக்கொண்டிருந்தபோது அவரை நோக்கி பாதணி எறியப்பட்டுள்ளது.

இன்று திரிபுரா கிழக்கு மக்களவைத் தொகுதியில் நடைபெறுவதாக இருந்த தேர்தல், ஏப்ரல் 23 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

வடமாநிலங்களிலும் இன்றைய வாக்குப்பதிவு பாரிய அசம்பாவிதங்கள் இன்றி நடைபெற்று முடிந்துள்ளது.

மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பிரசாரக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

உலகின் மிகப்பெரிய தேர்தலான இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் மே மாதம் 23 ஆம் திகதி வௌியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்