விடை பெறுகிறார் சன் ரைசர்ஸ் அணி ஓபனர் டேவிட் வார்னர்

பணியை செம்மையாக செய்து விடை பெறுகிறேன் என்று சன் ரைசர்ஸ் அணி ஓபனர் டேவிட் வார்னர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இத்தொடரின் வெற்றிகரமான பேட்ஸ்மேனாக வார்னர் ஜொலித்துள்ளார். நடப்பு தொடரில் 12 போட்டிகளில் ஆடியுள்ள அவர், அவற்றில் 692 ரன்களை (சராசரியாக 69.20 ரன்கள்) குவித்துள்ளார். இதுவரை அதிக ரன்கள் குவித்துள்ள வீரர்களின் பட்டியலில் வார்னர் முதலிடத்தில் உள்ளார்.

உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றுள்ள வார்னர், அதற்கான பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்காக இன்று ஆஸ்திரேலியா புறப்படுகிறார்.

வெற்றியுடன் விடை பெறுவதில் மிக்க மகிழ்ச்சி என்று அவர் நெகிழ்ச்சியுடன் நேற்று கூறினார். 81 ரன்களில் அவர் ஆட்டமிழந்து வெளியேறிய போது, ரசிகர்களும் எழுந்து நின்று கரகோஷத்துடன் அவருக்கு விடை கொடுத்தனர். வார்னர் கூறுகையில், ‘‘மைதான பராமரிப்பு பணியாளர்கள் இடைவிடாது உழைத்து எங்களுக்காக நல்ல ஆடுகளம் அமைத்து தந்தனர். அடிப்படைகளை கட்டமைத்துக் கொண்டு, வியூகம் வகுத்து ஆடினோம். இன்னும் 2 ஓவர்கள் நான் ஆடியிருக்கலாம். ஆனால் ரன் எடுக்க முடியாமல் ஒன்றிரண்டு பந்துகளை தவற விடும் வேளைகளில், எனது ரத்த ஓட்டம் எகிறுகிறது.

இத்தொடரில் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக ஆடி வருகிறேன். எனது பணியை செம்மையாக செய்து, விடைபெறுகிறேன். அதில் எனக்கு அதிக மகிழ்ச்சி. இயல்பில் வேடிக்கையான, குறும்புத்தனம் மிகுந்த நபர் நான். ஆனால் இத்தொடரில் மிகவும் பொறுப்பாக ஆடியிருக்கிறேன். என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன். எனக்கு என்ன வருமோ, அதை கொடுத்திருக்கிறேன். அடுத்து ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வருகிறது.

என்னுடைய நோக்கம் அதில் இருக்கும். இந்த ஐபிஎல் தொடரில் ஆடியதில் கிடைத்த அனுபவம், உலகக்கோப்பை போட்டிகளில் ஆடுவதற்கான படிக்கல்லாக இருக்கும்’’ என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்