நாடளாவிய ரீதியில் பலத்த பாதுகாப்புடன் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

நாட்டில் நிலவிய பயங்கரவாத அச்சுறுத்தல்கள் காரணமாக பிற்போடப்பட்டுவந்து பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் தலைநகர் கொழும்பில் பாடசாலைகளின் பிரதான நுழைவாயிலில் தீவிர சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் மாணவர்கள் பாடசாலைகளுக்குள் அனுமதிக்கப்படுவதை காணக்கூடியதாக உள்ளது.

யாழில் மாணவர்களின் புத்தகப் பைகள் ஆசிரியர்கள், பெற்றோர்கள், இராணுவம், பொலிஸார் இணைந்து சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் மாணவர்கள் பாடசாலைக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இவ்வாறு பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்ட போதிலும் இன்று மாணவர்களின் வருகை வீழ்ச்சியாகவே காணப்படுவதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை ஊழியர்கள் அனைவரும் பலத்த பாடசாலை நுழைவாயிலில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பாடசாலைக்குள் அனுமதிக்கப்படுவதை காணக்கூடியதாக உள்ளது.

வவுனியாவிலும் தீவிர சோதனைக்கு மத்தியில் மாணவர்கள், ஆசிரியர்கள் பாடசாலைகளுக்குள் அனுமதிக்கப்பட்டதுடன், பிரார்த்தனை நிகழ்வுகள் வகுப்பறைக்குள்ளேயே மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதேவேளை, நகரின் பிரபல பாடசாலைகளான தமிழ் மகா வித்தியாலயம், இறம்பைகுளம் மகளிர் கல்லூரி, சைவ பிரகாச மகளிர் கல்லூரி போன்ற பாடசலைகளில் இராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை சுட்டிக்காட்;டத்தக்கது.

மன்னாரிலும் பொலிஸார், இராணுவம், பாடசாலை ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்கம் ஆகியவை இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மன்னார் வலயக்கல்வி திணைக்கள அதிகாரிகள் பாடசாலைகளில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும் இன்றைய தினம் மாணவர்களின் வரவு மிக குறைவாகவே அவதானிக்கப்படுவதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் பாடசாலைகளுக்குள் உள்வாங்கப்பட்டிருந்ததுடன், பாடசாலைக்கு அருகிலான பொது போக்குவரத்துகள் தடைசெய்யப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

மட்டக்களப்பில் இன்றைய தினம் பெருமளவான மாணவர்கள் உற்சாகத்;துடன் பாடசாலைக்கு சமூகமளித்ததை காணக்கூடியதாகவிருந்ததாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்