கட்டுப்பாட்டுக்குள் வந்தது நீர்கொழும்பு இன மோதல்! – பொலிஸார் கூறுகின்றனர்

நீர்கொழும்பில் நேற்று முன்னிரவு வெடித்த இரு இனங்களுக்கிடையிலான வன்முறை தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இன்று காலை 7 மணிக்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட பின்னர், அந்தப் பகுதியில் சட்டம், ஒழுங்கு பேணப்படுவதை பாதுகாப்பு தரப்பினர் உறுதிசெய்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நீர்கொழும்பு – பலகத்துறையில் நேற்று மாலை சுமுகமற்ற நிலைமை தோன்றியது. அந்தப் பகுதியில் குளிக்கச் சென்ற ஓட்டோ சாரதிகளான நான்கு இளைஞர்கள், இளைஞர் குழுவொன்றினால் தாக்கப்பட்டுள்ளனர். இதன்போது ஓட்டோ ஒன்றும் தாக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அயல் கிராம மக்கள் பெரும் எண்ணிக்கையில் கூடி, தடிகள், பொல்லுகள், வாள்கள் மற்றும் கத்திகளுடன் வந்து அந்தப் பகுதியில் நின்ற வாகனங்கள் சிலவற்றை அடித்து நொறுக்கித் தீவைத்துக் கொளுத்தினர். சில வர்த்தக நிலையங்களையும், வீடுகளையும் தாக்கி சொத்துக்களை நாசம் செய்தனர். இந்தக் குழுவில் சுமார் 2000 பேர் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

எனினும், நிலைமை கட்டுபாட்டை மீறி போவதையடுத்து நீர்கொழும்புப் பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரப் படையினரும், முப்படையினரும் அங்கு குவிக்கப்பட்டு கலவரக்காரர்கள் அகற்றப்பட்டனர். பாதுகாப்புத் தரப்பினரின் கட்டளைக்கும் கீழ்ப்படிய மறுத்து, அவர்களின் முன்பாகவே சிலர் வன்முறையில் ஈடுபட்டனர்.

இந்தப் பகுதி முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் பகுதி. அயல் கிராமத்தைச் சேர்ந்த சிங்களவர்களே வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் அச்சமடைந்த பிரதேச முஸ்லிம் மக்கள் இரவில் அந்தப் பகுதியில் உள்ள பெரிய பள்ளிவாசலில் தஞ்சமடைந்திருந்தனர்.

நேற்றிரவு ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் தமது வீடுகள் மீது வன்முறையாளர்கள் கல் வீச்சுத் தாக்குதலையும் மேற்கொண்டிருந்தனர் என்று நீர்கொழும்பு முஸ்லிம் மக்கள் கவலை தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்