கொட்டகலை பாடசாலைக்கு அருகில் வெடி மருந்துகள் மீட்பு

திம்புள்ள- பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை ஸ்ரீ பெரகும் சிங்கள வித்தியாலயத்திற்கு அருகில் சுமார் ஒரு கிலோவிற்கு அதிகமான வெடி மருந்துகளை பாதுகாப்பு பிரிவினர் மீட்டுள்ளனர்.

குறித்த பாடசாலையின் வளாகப்பகுதிகளை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் அப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர் இன்று (திங்கட்கிழமை) ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது குப்பைகள் அதிகம்  நிறைந்திருந்த இடத்தில், பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் வெடி மருந்துகள் இருந்ததை கண்ட அவர்கள், உடனடியாக பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு பிரிவினர் பொதியை மீட்டு பார்வையிட்டபோது, அதில் கல் உடைக்க பயன்படுத்தும் வெடி மருந்துகளே இருப்பதாகவும், இப்பகுதியில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் எவரேனும் இதை தூக்கி எரிந்து விட்டு சென்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்