உடுவில் பிரதேச சபைக்கு குண்டு வைப்பதாக அச்சுறுத்தல்!- சபை கூட்டம் இரத்து

யாழ்ப்பாணம், உடுவில் பிரதேச சபையில் குண்டு வைக்கவுள்ளதாக தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில், சபையில் இடம்பெறவிருந்த கூட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் விசேட அதிரடிப்படையினா், பொலிஸாா் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டு தேடுதல் நடத்தப்படுவதுடன் பிரதேச சபைக்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடா்பாக மேலும் தெரியவருவதாவது, உடுவில் பிரதேச சபையில் அபிவிருத்தி தொடா்பாக விசேட கூட்டமொன்றை நடத்துவதற்கு இன்று (திங்கட்கிழமை) ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் பிரதேச சபையின் பொதுமக்கள் தொடா்பு அலுவலகருக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்திய சந்தேகநபர், “கூட்டம் நடைபெற்றால் சபைக்குள் குண்டு வெடிக்கும்” என அச்சுறுத்தியுள்ளாா்.

இதனையடுத்து பிரதேச சபையினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதன் அடிப்படையில் பொலிஸாா், விசேட அதிரடிப்படையினா் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டு வருவதுடன் பிரதேச சபைக்கு பாதுகாப்பும் வழங்கப்பட்டிருக்கின்றது.

இதேவேளை தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட சந்தேகநபர் தொடா்பாக தீவிர விசாரணையில் படையினர் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்