குருட்டாட்டம் கூடாது….!

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் ஆகியோர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சில சில காரணங்களை முன்வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த கைது ஒரு சாதாரண விடயமன்று. மிகவும் சிக்கல்வாய்ந்த விடயம். அவர்கள் கைதுசெய்யப்பட்டமை பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலத் தடைச் சட்டம் ஆகியவற்றின் கீழ். அந்தச் சட்டத்தின் சரத்துக்கள் மிகவும் காத்திரமானவை. நீதிமன்றம நினைத்தால்கூட இவர்களை விடுதலைசெய்வது கடினமான காரியமாகும்.

மாணவர்கள் மீதான கைதுக்கு தற்போது எம்மிடம் இருக்கின்ற ஒரே ஆயுதம் மென்வலு மட்டுமே! எந்தப் பெரிய சட்ட அறிவும் – சட்ட ஆளுமையும் – சட்டப் புலமையும் – இந்தக் கைதுவிடயத்தில் உபயோகப்படமாட்டாது. அரச தரப்பு நினைத்தால் மாத்திரமே அவர்களை விடுதலை செய்யமுடியும்.

இலங்கை அரசமைப்புக்கு முரணாக ஜனாதிபதி மைத்திரிபால ஒக்ரோபரில் செயற்பட்டபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவருமாக இருந்த இரா.சம்பந்தனை பிரதான மனுதாரராகக் கொண்டு, அவரது பெயரில் முதலாவது மனுவை உயர்நீதிமன்றில் தாக்கல்செய்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கனக ஈஸ்வரன் முதலான சட்ட வல்லுநர்கள் சிறப்பாக வாதாடி எவரும் எள்ளளவும் எதிர்பார்க்காத ஓர் இமாலய வெற்றியைப் பெற்று அரசமைப்பைத் தூக்கி நிறுத்தினார்கள். இலங்கைச் சட்டத்துறையை சர்வதேசமே வியந்துபோற்றுமளவுக்கு, ஆணை பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர, அனைத்தையும் செய்யும் ஆற்றல்கொண்ட இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதியையே ஆட்டங்காண வைத்தனர்.

இவ்வாறான ஒரு பெரும் சதாதனையை எம் தமிழ் சட்ட வல்லுநர்கள் படைக்க, அதைப் பலரும் ஏத்த, குறுகிய அரசியல் லாபங்கொண்ட குறுகிய மனம் படைத்த சிலர், புரிந்தும் புரியாத மாதிரி, ரணிலுக்காக முண்டுகொடுத்த சுமந்திரன், அரசியல் கைதிகள் விடுதலைக்காக நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்து வாதாடி அவர்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுக்கலாமே! ஏன் செய்யவில்லை? அவருக்கு தமிழ்மக்கள் நலனைவிட ரணிலின் நலன்தான் பெரிது! என்று பொய்வதந்திகளை மக்கள் நம்புமளவுக்கு உண்மைபோல் பரப்பினார்கள். மக்களில் சிலரும் இவர்கள் பேச்சைக்கேட்டு சுமந்திரனைக் கடிந்தார்கள்.

உண்மை நிலைவரம் இதுதான். அரசியல் கைதிகள் அனைவரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள். அவர்கள்மீது அரசாங்கம்தான் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. ஒரு வழக்குக்கு எதிராக இன்னொரு வழக்கு தாக்கல் செய்வதற்கு சட்டத்தில் இடமில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சரத்துக்கள் மிகவும் காத்திரமானவை. ஒருவர் பயங்கரவாதி என்று தெரிந்தாலோ அல்லது அவர் செய்த குற்றம் தொடர்பில் தெரிந்திருந்தாலோ பாதுகாப்புத் தரப்புக்குத் தகவல்கொடுக்கத் தவறினால் அவரையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யலாம்.  அவ்வளவுக்கு மிகவும் சட்டச் சிக்கலானதுதான் பயங்கரவாதத் தடைச் சட்டம். இதனால், நாட்டின் ஆட்சியாளர்களுடன் அரசியல் ரீதியில் பேசி, மென்போக்கின் ஊடாகத்தான் இந்த விடயத்தைக் கையாளவேண்டும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்