தமிழரைப் போராடத் தூண்டியதுபோல் முஸ்லிம்களையும் தூண்டிவிடாதீர்கள்! – மைத்திரி

“தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரில் தமிழர்களைப் போராட்டத்துக்குத் தள்ளியதைப்போல் இந்த நாட்டுடன் தொடர்பில்லாத ஒரு இஸ்லாமிய தீவிரவாதத்தைச் சுட்டிக்காட்டி ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் பயங்கரவாதத்துக்குள் தள்ளவேண்டாம். நாட்டுக்குள் இருக்கும் 150 தீவிரவாதிகளோடு சேர்த்து அனைத்து முஸ்லிம்களையும் பார்க்க வேண்டாம்.”

– இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கடந்த மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலையடுத்து நாட்டின் சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த சபை ஒத்திவைப்புவேளை விவாதம் நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் சபைக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரையை நிகழ்த்தினார். அதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கடந்த 21ஆம் திகதி தாக்குதலின்போது அதிகமாகப் பேசப்பட்ட விடயமாக எனது வெளிநாட்டுப் பயணம் இருந்தது. நான் சிங்கப்பூரில் இருந்தபோது எனக்கு இந்தச் சம்பவம் தெரியவந்தது. இந்தத் தாக்குதல் எவ்வாறு இடம்பெற்றது என்பதை யோசித்தேன். சர்வதேச தீவிரவாத அமைப்பால் இது நடத்தப்பட்டது என்று அப்போது எனக்குப் புரியவில்லை. எமது பாதுகாப்புத் தரப்பின் கடிதம் ஒன்றும் அப்போது சமூக வலைத்தளங்களில் பரவியது. அதனை நான் அவதானித்தேன். அப்போது எனக்குப் புரிந்தது, இந்தச் சம்பவம் குறித்து பாதுகாப்புத் தரப்புக்குத் தெரிந்துள்ளது என்பது. இதற்கு யார் காரணம் என்பதைக் கண்டறிய விசாரணைக்குழுவை உருவாக்க நினைத்தேன். நான் நாட்டுக்கு வர முன்னர் விசாரணை ஆணைக்குழுவை நியமிக்க நடவடிக்கை எடுத்துவிட்டேன்.

அடுத்த நாள் காலை பாதுகாப்புக் குழு கூட்டப்பட்டது. அதற்கு முன்னர் விசாரணை ஆணைக்குழு உறுப்பினர்களை நியமித்தேன். பாதுகாப்புச் சபையில் இது குறித்து பேசினேன். பிரதமர் மற்றும் பாதுகாப்புப் பிரதானிகளைத் தொடர்புகொண்டு அடுத்த கட்டம் குறித்துப் பேசினேன். இனியொரு சம்பவம் இடம்பெறாது இருக்கவும் இதற்குப் பொறுப்பானவர்கள் யார் என்பதைக் கண்டறியவும் சகல நடவடிக்கைகளையும் நான் முன்னெடுத்துள்ளேன்.

பாதுகாப்பு அமைச்சின் பிரதான பதவிகளின் மாற்றங்களைச் செய்துள்ளேன். பாதுகாப்புப் படைகளுக்குச் சிறப்பு அதிகாரங்களைக் கொடுத்துள்ளேன். குற்றவாளிகளைக் கைதுசெய்யும் சகல நடவடிக்கைகளையும் முன்னேடுத்துள்ளேன். இன்று பாதுகாப்பு சிறப்பாக உள்ளது. எனினும், விமர்சனங்கள் இன்னும் உள்ளன. ஆனால், இது குறித்து முழுமையான அறிவுடன் அனைவரும் பேச வேண்டும்.

இந்தப் பிரச்சினை இலங்கையின் பிரச்சினை அல்ல. இது சர்வதேசப் பிரச்சினை. இந்தப் பிரச்சினை குறித்து பின்னணி தெரியாது பலர் பேசுகின்றனர். கண்மூடித்தனமாக இந்தப் பிரச்சினை குறித்துப் பேசுகின்றனர். இது குறித்து அனைவரும் முதலில் அறிந்துகொண்டு செயற்பட வேண்டும். ஊடகங்கள் இந்த விடயத்தில் பொறுப்பாகச் செயற்பட வேண்டும்.

இதுவரை கைதுசெய்யப்பட்டவர்களில் 12 பேர் முக்கியமான தீவிரவாதிகள். கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் குண்டுகள் தயாரிக்கப் பயன்படுத்தும் பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தத் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 41 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அவர்களின் வீடுகள், சொத்துக்கள் அனைத்தும் அரச உடைமையாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு சிறு உதவிகளை செய்த நபர்களுக்குப் பிரதான தீவிரவாதிகளால் ஒரு நபருக்கு தலா 20 இலட்சம் ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளது. புலனாய்வுத்துறையால் இந்த விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 15 வாகனங்கள், 4 மோட்டார் சைக்கிள்கள் இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்டுக் கைப்பற்றப்பட்டுள்ளன.

நாம் 30 வருடங்கள் போருடன் வாழ்ந்த மக்கள். குண்டுகளுடன் வாழ்ந்துள்ளோம். இப்போது இந்தத் தாக்குதல்தான் முதல் தாக்குதல் அல்ல. இந்த நாட்டில் 6ஆவது ஜனாதிபதி நான். எனக்கு முன்னர் இருந்த 5 ஜனாதிபதிகளின் காலத்தில் குண்டுகள் வெடித்துள்ளன. அதனை மறந்துவிட வேண்டாம். இந்தத் தாக்குதல் இலங்கையில் உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. இந்தத் தாக்குதலில் இயக்குநர் எங்கிருந்தோ தாம்தான் காரணம் என்கிறார். இது குறித்து நாம் கவனமாகச் சிந்திக்க வேண்டும். எம்மைவிட பலமான நாடுகளுக்கு இது பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

முஸ்லிம் மக்களைப் பார்த்தால் சிங்கள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அதேபோல் முஸ்லிம் மக்களும் அச்சத்தில் உள்ளனர். இந்தத் தாக்கம் தமிழ் மக்களையும் பாதித்துள்ளது எனபது அறிந்துகொள்ள முடிகின்றது. இந்தத் தாக்குதலுடன் தொடர்புபட்ட 150 இற்கும் குறைவான தீவிரவாதிகள் உள்ளனர் என்று புலனாய்வு அறிக்கை கூறுகின்றது. அவர்களுக்காக ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் தீவிரவாதத்துக்குள் தள்ளுவதா என்பதை யோசிக்க வேண்டும்.

தமிழிலில விடுதலைப்புலிகள் காலத்தில் சகல தமிழரும் புலிகள் என்ற கருத்து உருப்பெற்றது. அதனால் எமக்குள் பிரிவு ஏற்பட்டது. 1983ஆம் ஆண்டு ஜுலைக் கலவரத்தில் தமிழர்களின் சொத்துக்கள் நாசமாக்கப்பட்டதை அடுத்து தமிழ் இளைஞர்கள் புலிகளில் இணைந்தனர். நாம் தமிழர் மீதான அவநம்பிக்கை கொண்டமையே 30 ஆண்டுகாலப் போரை உருவாக்கக் காரணமாக அமைந்தது. இப்போது நாம் பொறுப்புடன் செயற்பட வேண்டும். விடுதலைப்புலிகள் எனத் தமிழர்களைப் பார்த்ததைப்போல் முஸ்லிம்களைப் பயங்கரவாதிகள் என்றோ அல்லது தீவிரவாதிகள் என்றோ பார்க்க வேண்டாம்.

தீவிரவாதம் என்பது உலகத்தில் எங்கு, எப்போது உருவாகும் என்பதை எவராலும் தெரிவிக்க முடியாது. உலகத் தலைவர்கள் எவராலும் அதை எதிர்பார்க்கவும் முடியாது. எம்மால் செய்ய முடிந்த அனைத்தையும் நாம் செய்ய வேண்டும். இப்போது நாட்டில் இன ஒற்றுமையே வேண்டும். சகல மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்