வெனிசுவேலா தேசிய சட்டமன்ற துணைத் தலைவர் கைது

வெனிசுவேலா தேசிய சட்டமன்றத்தின் துணைத் தலைவர் எட்கர் ஸாம்பிரானோ (Edgar Zambrano)  புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புலனாய்வு பிரிவினர் அவரை அணுகியபோது அவர் காரைவிட்டு இறங்க மறுத்துள்ளார். இதனையடுத்து அவர் காருடன் சிறைச்சாலையை நோக்கி இழுத்துச் செல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவிற்கு எதிராக ஒரு இராணுவ புரட்சியை ஏற்படுத்துவதற்கான முயற்சி கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட முதலாவது எதிர்க்கட்சியை சேர்ந்த நபராக இவர் காணப்படுகிறார்.

இவர் நகரின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்படும் எல் ஹெலிகொய்ட் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கக்கூடும் என ஜனநாயக செயல் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, துணைத்தலைவரின் கைது மற்றும் அவரது கார் இழுத்து செல்லப்பட்டமை ஆகியன நியாயமற்ற செயற்பாடுகளாகும் என தேசிய சட்டமன்றத் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஜுவான் குவைடோ தெரிவித்துள்ளார்.

தோல்வியுற்ற இராணுவ புரட்சியில் ஈடுபட்ட ஸாம்பிரானோ மற்றும் ஆறு சட்டமன்ற பிரதிநிதிகளுக்கு தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்படும் என வெனிசுவேலா உயர் நீதிமன்றம் எச்சரித்திருந்த நிலையிலேயே இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்