ஊரடங்கு வேளையிலும் குண்டர்கள் அட்டகாசம்! துப்பாக்கிச் சூடு.. கண்ணீர் புகைக் குண்டுகள் வீச்சு! திணறும் முப்படையினர்

வடமேல் மாகாணத்தில் உள்ள குருநாகல், புத்தளம் மாவட்டங்களில் வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதிலும் பதற்றத்தை தணிப்பதிலும் முப்படையினரும், பொலிஸாரும் இரவு வேளையில் தடுமாறுகின்றனர்.

அங்கு ஊரடங்கு நேரத்திலும் குண்டர்கள் தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குருநாகல் மாவட்டத்தில் பல இடங்களில் வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.

எனினும், சில இடங்களில் வன்முறையாளர்களை கட்டுப்படுத்த பொலிஸாரும், இராணுவத்தினரும் துப்பாக்கிச் சூடு நடத்தி கண்ணீர் புகைக் குண்டுகளும் வீசியுள்ளனர்.

“நூற்றுக்கணக்கான குண்டர்கள் தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர். இராணுவத்தினரும் பொலிஸாரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் முஸ்லிம்களின் வீடுகள், வணிக நிலையங்களை தாக்கி எரித்துக் கொண்டிருக்கின்றனர்“ என்று கொட்டாம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தாங்கள் வீடுகளை விட்டு வெளியேற முனைந்த போதும் பொலிஸார் உள்ளேயே இருக்குமாறு கூறி விட்டனர் எனவும் அந்த நபர் கூறியுள்ளார்.

அதேவேளை வடமேல் மாகாணத்தில் நேற்று மாலை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்னமும் நீக்கப்படவில்லை.

மறு அறிவித்தல் வரை அங்கு ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்