வன்முறையாளர்களுக்கு எதிராக உச்சபட்ச நடவடிக்கை! – துப்பாக்கிச்சூடு நடத்தவும் தயங்கோம் என்கிறார் இராணுவத் தளபதி

வன்முறைகளில் ஈடுபடுவோரைக் கட்டுப்படுத்த இராணுவம் உச்சபட்ச நடவடிக்கைகளை எடுக்கும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அறிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்பதே எமது விருப்பம். சட்டம், ஒழுங்கை மீறும் வகையில் எவரேனும் செயற்பட முடியாது. அப்படிச் செயற்படுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவை ஏற்பட்டால் துப்பாக்கிச்சூடு நடத்தவும் தயங்கப்போவதில்லை.

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குப் முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு நான் அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.

வட மேல் மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் போதையில் சுற்றித் திரியும் சிலராலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் மற்றும் முப்படையினர் இந்தப் பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர். ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நேரத்தில் அல்லது ஏனைய நேரங்களில் நல்லிணக்கத்துக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்பட்டால் சட்டம் முழுமையாக செயற்படுத்தப்படும்.

பொதுமக்கள் இவ்வாறானவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காது அமைதியான முறையில் தமது பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறான கும்பலுக்கு ஆதரவு வழங்கும் வகையில் செயற்பட்டால் இராணுவத்தினர் தமது அதிகாரத்தை முழுமையாகப் பிரயோகிக்க வேண்டி ஏற்படும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்