முல்லைத்தீவில் சிங்கள மக்களுக்கு இடம் வழங்கிய மாவட்ட செயலர்!

முல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் குடியேறியுள்ள சிங்கள மக்களது வீட்டுத்திட்ட பிரச்சினைக்கு பாடசாலையுடனான சுமார் 3 ஏக்கர் காணியில் ஒருவருக்கு தலா 6 பேச் காணியில் 62 வீடுகள் அமைக்க முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் மக்களது சம்மதத்துடன் அனுமதி அளித்தார்.

இந்த விடயம் குறித்து மேலும் அறியவருவதாவது,

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் அத்துமீறி குடியேறியுள்ள நீர்கொழும்பு பகுதி சிங்கள மக்கள் தமக்கான வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 11.05.2019 இடம்பெற இருந்ததாகவும் அந்த நிகழ்வை முல்லைத்தீவு மாவட்ட செயலகம், கரைதுறைப்பற்று பிரதேச செயலகமும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா ஆகியோர் இணைந்து தடுத்து நிறுத்தி உள்ளதாக குற்றம் சுமத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

1934 ஆம் ஆண்டு முதல் தங்களுடைய மூதாதையர்கள் இங்கு வந்து தொழில் செய்து வந்ததாகவும் அதனைத் தொடர்ந்து தாங்களும் இங்கு வாழ்ந்து வருவதாகவும் கடந்த 30 வருட யுத்தத்தின் போதும் தாங்கள் இந்த இடத்திலேயே இருந்ததாகவும் தெரிவித்த மக்கள் 1982 ஆம் ஆண்டு தமக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் 62 வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்பட்டதாகவும் அந்த வீடுகளின் அத்திவாரங்கள் தற்போதும் இருப்பதாகவும் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்தோடு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

இந்நிலையில் உறுதிமொழி அளித்ததற்கு அமைவாக நேற்று மாலை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மாவடட முகாமையாளர் மேலதிக மாவடட செயலாளர் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் காணி உத்தியோகத்தர் நில அளவை திணைக்கள உத்தியோகத்தர் ஆகியோருடன் சம்பவ இடத்துக்கு சென்ற முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் குறித்த பகுதியில் உள்ள மக்களின் வாழ்விடங்களை பார்வையிட்டு குறித்த பகுதியில் உள்ள காணிகளை அடையாளப்படுத்தி குறித்த இடத்தில் அமைந்துள்ள பாடசாலையுடனான சுமார் 3 ஏக்கர் காணியில் ஒருவருக்கு தலா 6 பேச் காணியில் 62 வீடுகள் அமைக்க மக்களது சம்மதத்துடன் அனுமதி அளித்தார். இதற்கு மக்கள் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்