விடுதலைப் புலிகள் நேருக்கு நேர் நின்று போராடியவர்கள்: தற்போதைய நிலைமை வேறு – தயாசிறி

விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற போர் இலகுவானது எனவும் அவர்கள் நேருக்கு நேர் நின்று போராடினார்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போதைய நிலைமை வேறு எனக் குறிப்பிட்ட அவர், முஸ்லிம் தீவிரவாதிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்வது மிகவும் கடினமானது எனவும் தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இவ்வாறு  கூறினார்.

அவர் தெரிவிக்கையில், “முஸ்லிம் கிராமங்களில் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு பொலிஸ் மற்றும் பாதுகாப்புத் தரப்பிடம் நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம். இல்லையென்றால் முஸ்லிம் கிராமங்களில் வசிப்பவர்கள் குறித்து சிங்கள மக்கள் மத்தியில் சந்தேகமே ஏற்படும்.

ஆகவே முஸ்லிம் கிராமங்களை விடுவிக்க வேண்டும். முஸ்லிம் கடைகள் மற்றும் பள்ளிகளை தாக்குபவர்கள் மீது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யவேண்டும்.

வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் மீது எந்த பேதங்களும் இன்றி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்து ஆறு அல்லது ஏழு மாதங்களுக்கு சிறைத்தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமே வன்முறைகளை மேற்கொள்வதற்கு மற்றவர்கள் அச்சப்படுவார்கள்.

இதேவேளை, முஸ்லிம் கிராமம், சிங்கள கிராமம் ஆகியன ஒன்றோடு ஒன்று இணைந்து இருக்கின்றன. புலிகளுடன் இடம்பெற்ற போர் இலகுவானது. அங்கு அவர்கள் முகத்திற்கு முகம் நின்று போராடினார்கள்.

ஆனால் முஸ்லிம் தீவிரவாதிகளை கண்டுபிடிப்பது கடினமானது. முஸ்லிம் மக்கள் தீவிரவாதிகளை பிடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். அதனால் தான் நடவடிக்கைகளை பலப்படுத்துமாறு கேட்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்