குண்டு வெடிப்பு சத்தத்தால் யாழில் பதற்றம்!

யாழ். மூளாய் பகுதியில் குண்டு வெடிப்பு சத்தத்தால், மக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அத்தோடு அப்பகுதியில் உள்ள வீடுகளில் அதிர்வுகளும் ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை பாரிய குண்டொன்று வெடித்ததைப்போன்று சத்தம் எழுந்துள்ளது.

அதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளுக்கு வெளியே வந்து வீதியில் கூடி அது தொடர்பில் ஆராய்ந்துள்ளனர். இதன்போது, மீண்டும் பெரிய வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து மூளாய் பித்தனை சுடலை பகுதியிலிருந்து பெரும் புகை எழும்பியுள்ளது.

அதேவேளை அப்பகுதியில் இராணுவ வாகனம் ஒன்று நின்றதை அவதானித்த மக்கள், இராணுவத்தினர் குண்டுகளைச் செயழிலக்க செய்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இராணுவத்தின் குண்டு செயழிலக்கச் செய்யும் பிரிவினர் வழமையாக கல்லுண்டாய் வெளி பகுதியிலேயே குண்டுகளை செயலிழக்க செய்வார்கள்.

தற்போது அப்பகுதியில் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதனால், மூளாய் பித்தனை சுடலை பகுதியில் குண்டுகளை செயழிலக்கச் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த சம்பவம் தொடர்பாக உறுதிப்படுத்தக்கூடிய தகவல்கள் எதனையும் பொலிஸார் வெளியிடவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்