தமது இனத்தின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு அமைச்சர்களாக செயற்படுகின்றமை ஆரோக்கியமானது அல்ல.- எம்.இராஜேஸ்வரன்

மத்திய அரசாங்கத்திலும், மாகாண சபைகளிலும் அமைச்சர்களாக இருப்பவர்கள் ஒரு இனத்திற்கு மட்டும் உரித்தான அமைச்சர்கள் அல்ல. இவர்கள் முழுத் தேசத்திற்கும் குறிப்பிட்ட மாகாணத்திற்கும் பொதுவான அமைச்சர்களாவர். ஆனால் இந்நாட்டில் தற்சமயம் அமைச்சர்களாக உள்ள சிலர் தமது இனத்தின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு அமைச்சர்களாக செயற்படுகின்றமை ஆரோக்கியமானது அல்ல. எனவே இன ரீதியான பாகுபாடுகள் இன்றி சகல இன மக்களையும் அரவணைத்துச் செல்லக் கூடியவர்களே அமைச்சர்களாக இருப்பதற்கு தகுதி உள்ளவர்கள். – இவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் குறிப்பிட்டார்.

திருக்கோயில் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அலிக்கம்பை கிராமம், ஆலையடிவேம்பு பிரதேச செயலகப்பிரிவிலுள்ள கண்ணகிபுரம் கிராமம் என்பவற்றில் வாழ்கின்ற தமிழ் மக்கள் சுத்தமான குடிநீரைப் பெற முடியாமல் சொல்லொண்ணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இவ்விடயம் குறித்து நகர திட்டமிடல் தேசிய நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு எழுத்து மூலமான கோரிக்கையினை விடுத்திருந்தும் இதற்கு எந்தவிதமான பதிலையும் வழங்கவில்லை என்பது குறித்து விசனமடைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் மேலும் குறிப்பிடுகையில்,

இந்நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் அலிக்கம்பை, கண்ணகிபுரம் ஆகிய இரண்டு கிராமங்களும் வெகு மோசமாக பாதிக்கப்பட்ட கிராமமாகும். உயிரிழப்புக்களையும் உடமைகளையும் இழந்த இம்மக்கள் இன்று சுத்தமான குடிநீரைப் பெறமுடியாமல் அவதியுறுகின்றனர். இதே வேளை அம்பாறை மாவட்டத்திலுள்ள நீர்வளம் மிக்க கிராமங்களுக்கு தாராளமாக குடிநீர் விநியோகம் இடம்பெறுகின்றது. ஆனால் குடிநீர் தட்டுப்பாடு மிக்க இக்கிராம மக்கள் வானத்தைப் பார்த்து ஏங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவை தவிர இக்கிராமத்திலுள்ள பாடசாலை மாணவர்கள், பாடசாலை ஆசிரியர்கள் போன்றோர் தமக்கு வேண்டிய குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். எனவே ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இவ்விடயம் குறித்து கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க முன்வரவேண்டும் என்று பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்