ஜனாதிபதி பயணித்த விமானம் விபத்து என பதிவிட்ட மாணவனுக்கு விளக்கமறியல்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவிற்குச் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியது என பேஸ்புக்கில் பதிவிட்ட பல்கலைக்கழக மாணவனை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

போலி பிரசாரம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குறித்த மாணவனை நேற்று (புதன்கிழமை) கொழும்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அவரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் அபேவிக்ரம வீரசிங்க உத்தரவிட்டுள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான மாணவன் நகைச்சுவையாக பேஸ்புக்கில் பதிவு இட்டதாகவும் அவருக்கு நிபந்தனை அடிப்படையில் பிணை வழங்குமாறும் சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும் இதுமிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டிய காலமே தவிர நகைச்சுவைக்கான காலம் அல்லவென கூறிய நீதிபதி பிணை கோரிக்கையை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்