வெடிக்கும் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் – தந்தையும் மகனும் கைது

றிச்மண்ட் ஹில் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து வெடிமருந்து மற்றும் வெடிக்கும் பொருட்கள் ஆகியற்றைக் கைப்பற்றிய யோர்க் பிராந்திய பொலிஸார், குறித்த பகுதியைச் சேர்ந்த தந்தை மற்றும் மகனை கைது செய்துள்ளனர்.

கடந்த 9ஆம் திகதி குறித்த சந்தேக நபர்கள் அமெரிக்க சுங்கத்துறை மற்றும் எல்லைப் பாதுகாவல் அதிகாரிகளாலும், கனேடிய எல்லைப் பாதுகாவல் அதிகாரிகளாலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதனை அடுத்து மறுதினம் லார்ட் லேன் பகுதியில் உள்ள குறித்த வீட்டில் ஒன்ராறியோ மாநில பொலிஸார் மற்றும் யோர்க் பிராந்திய பொலிஸார் இணைந்து நடத்திய திடீர் சோதனையின்போது ஒரு தொகை வெடிமருந்து மற்றும் வெடிக்கும் பொருட்கள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரண்டு ஆண்களைக் கைது செய்த அதிகாரிகள், அவர்கள் மீது வெடிப் பொருட்களை வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 47 வயதான றேசா மொஹமடியாசல் மற்றும் அவரது மகனான 18 வயதான மஹ்யார் மொஹமடியாசல் என அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த கைது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மத்திய பொதுப் பாதுகாப்பு அமைச்சர், இந்த கைது நடவடிக்கை மற்றும் வெடிப்பொருட்கள் மீட்பு தொடர்பாக எந்தவித, “தேசிய பாதுகாப்பில் பிரச்சினைகள் எவையும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்